‘‘பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுப்போம்’’ முப்படை உயர் அதிகாரிகள் உறுதி


‘‘பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுப்போம்’’ முப்படை உயர் அதிகாரிகள் உறுதி
x
தினத்தந்தி 1 March 2019 5:53 AM IST (Updated: 1 March 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுப்போம் என்று இந்திய முப்படை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கினார். நல்லெண்ண நடவடிக்கையாக, அவரை 1–ந் தேதி (இன்று) விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் ராணுவ அமைச்சக அலுவலகத்துக்கு வெளியே முப்படை உயர் அதிகாரிகள் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, பாகிஸ்தானின் அறிவிப்பை நல்லெண்ண நடவடிக்கையாக கருதுகிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு விமானப்படை துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் கூறியதாவது:–

இதை ஜெனீவா ஒப்பந்தப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கிறோம். அபிநந்தன் விடுதலை ஆவதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை மீண்டும் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அவர் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான், மேற்கொண்டு கருத்து தெரிவிப்போம்.

திட்டமிடப்பட்ட இலக்கைத்தான் இந்திய விமானங்கள் தாக்கியதா? என்பது குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள். நிச்சயமாக, திட்டமிட்ட இலக்கைத்தான் தாக்கினோம். அதுபற்றிய நம்பகமான தகவல்களும், ஆதாரங்களும் உள்ளன. அவற்றை எப்போது வெளியிட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்களோ, அப்போது அவை வெளியிடப்படும்.

பாகிஸ்தான் விமானப்படை, ‘அம்ராம்’ ஏவுகணைகளை பயன்படுத்தவில்லை என்று பொய் சொன்னது. ஆனால், அந்த ஏவுகணையைத்தான் பயன்படுத்தியது. (வெடித்த ஏவுகணையின் ஒரு பகுதியை காட்டினார்). பாகிஸ்தான் வீசிய குண்டு, இந்திய ராணுவ நிலைய வளாகத்தில் விழுந்தது. ஆனால் அது இலக்கை தாக்கவில்லை. ராணுவ நிலைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் சுரிந்தர்சிங் மஹல் கூறியதாவது:–

கடந்த சில நாட்களில் 35 தடவை பாகிஸ்தான் போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டுள்ளது. எல்லை கட்டுப்பாடுகோடு மற்றும் சர்வதேச எல்லையில் இந்திய ராணுவம் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ இந்திய ராணுவம் உறுதி பூண்டுள்ளது. தீய சக்திகளுக்கு புகலிடம் தருபவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.

ஏவுகணை தடுப்பு சாதனங்கள், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் எத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டாலும் பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடற்படை உயர் அதிகாரி தல்பீர்சிங் குஜ்ரால் கூறியதாவது:–

நிலம், நீர், ஆகாயம் என அனைத்து மார்க்கத்திலும் பாகிஸ்தானின் எந்த சாகசத்தையும் தடுத்து முறியடிக்க கடற்படை தயாராக உள்ளது. உறுதியான, வலிமையான பதிலடி கொடுப்போம். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story