நாடே இந்திய விமானி பற்றி கவலைப்படும்போது பிரதமர் மோடி வாக்குச்சாவடி கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடுவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்


நாடே இந்திய விமானி பற்றி கவலைப்படும்போது பிரதமர் மோடி வாக்குச்சாவடி கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடுவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்
x
தினத்தந்தி 1 March 2019 5:57 AM IST (Updated: 1 March 2019 5:57 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானி அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்புவது பற்றி தேசமே கவலைப்படும்போது, பிரதமர் மோடி வாக்குச்சாவடி அளவிலான கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடுவதா? என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா ‘வெளிப்படையான தவறான முன்னுரிமை’ என்ற தலைப்பில் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

132 கோடி இந்தியர்களும் இந்தியாவின் துணிச்சலான விங் கமாண்டர் அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடி அடுத்த தேர்தலை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தனது முக்கியமான காரிய கமிட்டி கூட்டத்தை ரத்து செய்துள்ளது. ஆனால் பிரதம சேவகர் காணொலிகாட்சியில் சாதனையை உருவாக்க பிடிவாதமான உறுதியுடன் செயல்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவர் மணீஷ்திவாரி கூறும்போது, ‘‘தேசத்தை இன்னும் வலிமையாக்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரத்தில், பிரதமர் வாக்குச்சாவடிகளை வலிமையாக்குவதற்கு முன்னுரிமை கொடுத்தது துரதிர்ஷ்டவசமானது’’ என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ‘‘இந்திய விமானி பாகிஸ்தான் காவலில் இருக்கும் நேரத்தில் பிரதமரின் காணொலிகாட்சி உரையாடல் கேலிக்குரியது மட்டுமல்ல தேசத்தின் உணர்வுகளுக்கு துரோகம் இழைப்பது’’ என்று கூறியுள்ளார்.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘ஒட்டுமொத்த நாடே அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு இந்தியனாக அரசுக்கு ஆதரவாக நிற்கும்போது, பா.ஜனதா வாக்குச்சாவடி அளவிலான தொண்டர்களுடன் காணொலிகாட்சி மூலம் பேசுவதில் சாதனை செய்கிறது. இதனால் பா.ஜனதா ஆதரவாளர்கள் கூட வெட்கப்படுகிறார்கள்’’ என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘பிரதமர் காணொலிகாட்சி உரையை தள்ளிவைக்க வேண்டும். நாம் தேசத்துடன் இணைந்து இந்திய விமானியை பாதுகாப்பாகவும், பாகிஸ்தானுடன் கண்டிப்புடன் பேசி திரும்ப அழைத்துவருவதில் தான் நமது சக்தியை செலவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா, ‘‘பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை தொடர்வதன்மூலம் தனது உண்மையான அடையாளத்தை காண்பித்துள்ளார். விங் கமாண்டர் அபிநந்தன் நாடு திரும்புவது பற்றி அவர் கவலைப்படவில்லை’’ என்றார்.


Next Story