பாகிஸ்தான் படையின் பிடியில் அன்று நச்சிகேட்டா... இன்று அபிநந்தன்
பாகிஸ்தான் படை காவலில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிக்கி உள்ளார். இது நாட்டின் 130 கோடி இந்திய மக்களின் முகங்களிலும் கவலை ரேகையினை படியச்செய்துள்ளது.
அபிநந்தன் நன்றாக இருக்கிறார், டீ குடிக்கிறார், டீ நன்றாக இருக்கிறது என்கிறார் என்கிற ரீதியில் பாகிஸ்தான் தகவல் பரப்பினாலும், அவரது பேட்டியை வீடியோவாக கசியவிட்டாலும் இவை எல்லாம் நம்பத்தகுந்தவைதானா என்ற கேள்வி எழாமல் இல்லை.
நாட்டு மக்களின் கவலைக்கு விடிவு, அபிநந்தன் தாய்மண்ணுக்கு திரும்பி வருவதுதான். அதற்கு பாகிஸ்தான் செய்ய வேண்டியது, அவரை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைப்பதுதான்.
கார்கில் போரின்போதும், 26 வயதே ஆன இந்திய விமானப்படை விமானி நச்சிகேட்டா பாகிஸ்தானிடம் சிக்கினார். அவர் பாகிஸ்தான் படையிடம் சிக்கிய நாள், 1999-ம் ஆண்டு, மே மாதம் 27-ம் நாள்.
அவர் பாகிஸ்தான்வசம் இருந்த ஒவ்வொரு நாளும் கனமான நாளாகவே அமைந்தது. அவர் ஒரு வாரத்துக்கு பின்னர் இந்தியாவிடம் செஞ்சிலுவை சங்கம் மூலமாக ஒப்படைக்கப்பட்டார்.
கார்கில் போரின்போது, 18 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடிக்கிற பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ‘மிக்-27’ ரக போர் விமானத்தில் இருந்தபடியே அவர் படாலிக் பகுதியில் குண்டுகளை வீசியபடி இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது விமானத்தின் என்ஜின் பழுதானது.
உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற உந்துதலில் விமானத்தில் இருந்து அவர் குதித்தார். ஆனால் விழுந்த இடம், பாகிஸ்தான் எல்லை. அப்படி இருந்தும், தளராத மனதுடன் அவர் பாகிஸ்தான் படையினரை துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தவில்லை.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அவரை சிறை பிடித்தது. ராவல் பிண்டி சிறையில் அடைத்தது. ஒரு வாரம் சிறைவாசம். அதன்பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
அவர் தனது அனுபவங்களை ஆங்கில டி.வி. சேனல் ஒன்றிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர்கள், என்னை கொல்லப்பார்த்தனர். அவர்களைப் பொறுத்தமட்டில் நான் அவர்களது எதிரி நாட்டின் விமானி.
அப்போது நல்ல வேளையாக ஒரு அதிகாரி தலையிட்டு, என்னை அப்படி நடத்தக்கூடாது என பாகிஸ்தான் படையினரை கடிந்து கொண்டார்.
பாகிஸ்தானிடம் நான் பட்ட கஷ்டங்களையும், கொடுமைகளையும் விவரிப்பது மிகவும் கடினம். அதை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த நேரம் மரணம் ஒன்றுதான் எளிதான தீர்வு என நினைத்திருந்தேன்.
ஆனால் கடவுள் கிருபையால் என்னை அவர்கள் விடுவித்தனர். அதற்கு கடவுளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
18 ஆயிரம் அடி உயரத்திலிருந்து நான் விழுந்ததால் 3 ஆண்டுகளுக்கு என்னால் விமானத்தை இயக்க முடியவில்லை. அதனால் தரைவழி பணிகளில் நான் அமர்த்தப்பட்டேன். பின்னர் உடல்நலம் தேறி 2003-ம் ஆண்டு விமானத்தை இயக்கத் தொடங்கினேன்.
இவ்வாறு அவர் தனது அனுபவங்களை உருக்கமுடன் பகிர்ந்து கொண்டார்.
கார்கில் போரில் இப்படி நச்சிகேட்டா பாகிஸ்தான் படையிடம் சிக்கியதற்கு முன்பாக, 1971-ம் ஆண்டு, இந்திய, பாகிஸ்தான் போரின்போது இந்தியாவின் கேப்டன் திலீப் பருல்கரும், அவருடன் சேர்ந்து கிரேவால், ஹரீஷ் சிங்ஜி ஆகிய 2 பேரும் பாகிஸ்தான் படையினரிடம் சிக்கிய சம்பவமும் நடந்துள்ளது.
1971-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 10-ந் தேதி ஜெட் விமானத்தில் இருந்தபோது, அவர்களை பாகிஸ்தான் படை சுட்டது. அதில் பிடிபட்ட மூவரும் பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டனர்.
ஆனால் ராவல்பிண்டியில் சிறைக்காவலில் இருந்து 1972-ம் ஆண்டு, ஆகஸ்டு 13-ந் தேதி நள்ளிரவில் மூவரும் தப்பினர். இருப்பினும் வழியிலேயே ஜாம்ருட் என்ற இடத்தில் அவர்கள் மீண்டும் பாகிஸ்தான் படையினரிடம் சிக்கினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு 1 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை அவர்கள் பைசலாபாத் சிறையில் அனுபவித்தனர்.
அதன்பின்னர் ஜூல்பிகார் அலி பூட்டோ உத்தரவின் பேரில் அவர்கள் மூவரும் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் 3 பேருக்கும் வாகா எல்லையில் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாகிஸ்தானிடம் கைதியாக இருந்தபோது தான் அனுபவித்த சிக்கல்களை இப்போது பகிர்ந்து கொண்டுள்ள திலீப் பருல்கர், அபிநந்தனுக்கும் அது நேரக்கூடாது என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
அது அவரது விருப்பம் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருடைய விருப்பமும் அதுதான்.
அபிநந்தனின் வருகைக்காக இந்தியா காத்திருக்கிறது.