இந்திய விமானி என தவறாக கருதி சொந்த மக்களால் அடித்து கொல்லப்பட்ட பாகிஸ்தானிய விமானி
இந்தியர் என தவறாக கருதி சொந்த மக்களால் பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானத்தின் விமானி அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர். இதனை தொடர்ந்து கடந்த 26ந்தேதி பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இந்தியாவுக்குள் கடந்த 27ந்தேதி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமான படையினர் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்களது எப் 16 ரக ஜெட் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்திய தரப்பில் இருந்து விரட்டி சென்றதில் விமானம் ஒன்று ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. இதில் அபிநந்தன் என்ற இந்திய விமானி பாகிஸ்தானிடம் சிக்கினார். இதன்பின் சர்வதேச அழுத்தம் மற்றும் இந்தியாவின் தீவிர முயற்சியினால் அவர் விடுவிக்கப்பட்டு நேற்றிரவு இந்தியா வந்தடைந்து உள்ளார்.
இந்த நிலையில், லண்டனை சேர்ந்த வழக்கறிஞரான காலித் உமர் என்பவர் வெளியிட்டுள்ள தகவலில், கற்பனையை விட சில சமயங்களில் உண்மை வேறுபடுகிறது. பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபொழுது அது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துள்ளது. அதில் இருந்த ஷாஜாஸ் உத்தீன் என்ற விமானி வெளியே வந்துள்ளார். காயமடைந்திருந்த அவர் உயிருடனேயே இருந்துள்ளார்.
அவரை இந்தியர் என நினைத்து அங்கு கூடியிருந்த கும்பல் இரக்கமின்றி அடித்து தாக்கியுள்ளது. இதன்பின் அவர் சொந்த நாட்டுக்காரர் என அறிந்ததும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் எந்த பலனுமின்றி அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.
கடந்த 27ந்தேதி பாகிஸ்தான் ராணுவமும், 2 இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்றும் 2 விமானிகள் சிறை பிடிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தது.
அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் பேசும்பொழுது, 2 இந்திய விமானிகள் ராணுவத்திடம் சிக்கி உள்ளனர் என கூறினார். அதன்பின் ஒரு விமானி என கூறினர். இந்திய வெளியுறவு அமைச்சகமும் ஒரு விமானியை காணவில்லை என தெரிவித்திருந்தது.
பாகிஸ்தானின் எப் 16 விமானத்தின் விமானியான ஷாஜாஸ் மற்றும் அபிநந்தனுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உள்ளது. அபிநந்தனை போன்று ஷாஜாசின் தந்தையும் அந்நாட்டு விமான படையின் முன்னாள் அதிகாரி ஆவார்.
Related Tags :
Next Story