இந்தியா - பாகிஸ்தான் இடையே சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளையிலிருந்து மீண்டும் தொடக்கம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே செயல்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளையிலிருந்து மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து, பஞ்சாப்பின் அட்டாரியுடன் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல், வாரம் இருமுறை இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்ததால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு மேம்படும்போது, இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ரயில் சேவை நிறுத்தப்படாது என மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறியிருந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்தது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, இரு நாடுகளுக்கிடையில் இயக்கப்படும், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில், திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணியர் கடும் அவதி அடைந்தனர். இதனால், பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட, இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் நாளை (3-ம் தேதி) முதல் தொடங்கப்படும் என இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story