இந்தியாவுக்கு ரபேல் போர் விமானம் வர தாமதமாவதற்கு பா.ஜனதா அரசே காரணம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு


இந்தியாவுக்கு ரபேல் போர் விமானம் வர தாமதமாவதற்கு பா.ஜனதா அரசே காரணம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 March 2019 6:56 PM IST (Updated: 4 March 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் போர் விமானம் இந்தியா வருவதில் ஏற்படும் தாமதத்துக்கு பா.ஜனதா அரசே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

புதுடெல்லி,

ரபேல் போர் விமானம் தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ்திவாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தானில் நமது விமானப்படை பயங்கரவாதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதல் குறித்து நாங்கள் இதற்கு முன்பும் சரி, இப்போதும் சரி ஆதாரத்தை கேட்கவில்லை. நாங்கள் நமது ஆயுத படைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். பிரதமர் தான் இந்த வான் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் முடிவு வேறுவிதமாக அமைந்து இருக்கும் என்று அவர் தான் கூறியுள்ளார். பிரதமரே இப்படி கூறியிருப்பதால், அதன் உண்மை என்ன என்பது பற்றி எங்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது. இதற்கு என்ன அர்த்தம்? என்ன வேறுவிதமாக அமைந்து இருக்கும்? என்பதை பிரதமரிடம் இருந்து நாங்கள் அறிய விரும்புகிறோம்.

ஒரு மிக் போர் விமானம் பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது என்று தகவல் வெளியானது. இதில் இருந்து வேறு என்ன வித்தியாசமான எதிர்பார்ப்பு குறித்து பிரதமர் பேசுகிறார். இப்படி பேசியதன் மூலம் பிரதமர் தான் வான் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது முழுக்க முன்னெப்போதும் இல்லாதது. பிரதமரின் பேச்சு தேச பாதுகாப்புக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதுபோன்ற பேச்சுகள் மூலம் பிரதமர் தான் ஆயுதப்படைகளின் அற்புதங்களை தாழ்த்துகிறார். ரபேல் விமானங்கள் இந்தியா வருவதில் ஏற்படும் தாமதத்துக்கு இப்போதுள்ள பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசே காரணம். ஏனென்றால் இப்போதுள்ள அரசு தான் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தம் ஆகியவற்றை ரத்து செய்தது.

பிரதமரின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவரும், மத்திய மந்திரியுமான சுரீந்தர்சிங் அலுவாலியா, ‘வான் தாக்குதல் நடத்தியது மிரட்டுவதற்கு தான், கொல்வதற்கு அல்ல’ என்று கூறியிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? பிரதமர் இதுபற்றி நாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது அந்த மந்திரியை பதவிநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு மணீஷ்திவாரி கூறினார்.



Next Story