இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பாலகோட்டில் பயிற்சி பெற்றவர்கள்


இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பாலகோட்டில் பயிற்சி பெற்றவர்கள்
x
தினத்தந்தி 4 March 2019 2:52 PM IST (Updated: 4 March 2019 2:52 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பாலகோட்டில் பயிற்சி பெற்றவர்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதில் அழிக்கப்பட்ட பாலகோட் முகாம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுகிறது என உளவுத்துறை ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தது. இதன் அடிப்படையில் இந்திய விமானப்படைகள் தாக்குதலை நடத்தியது. இந்தியாவில் 2014-17 கால கட்டங்களில் கைது செய்யப்பட்ட 4 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பாலகோட் முகாமில்தான் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலகோட் தளத்தில் பயிற்சி அளிக்கப்படும் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் 2014-15-ல் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வாகாஸ் மன்சூர் இம்முகாமில்தான் பயிற்சி பெற்றுள்ளான். அவனுடன் 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “மன்சூர் பள்ளத்தாக்கு பகுதியில் 2007-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்துள்ளான், விசாரணையின் போது தன்னுடன் 40 பயங்கரவாதிகள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,” என தெரிவித்துள்ளான். 60 பயங்கராவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என மன்சூர் கூறியதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மன்சூர் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற இரண்டு மிகப்பெரிய தாக்குதல்களில் தொடர்பு உடையவன். குபுவாராவில் லோலாபில் 2009-ம் ஆண்டு பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. 4 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். 2009-ம் ஆண்டு ஜூனில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த இரு தாக்குதலிலும் தொடர்புடையவன் மன்சூர். 2010-ல் மீண்டும் பாகிஸ்தான் சென்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளான் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிற பயங்கரவாதிகளும் முகாமில் பயிற்சி பெற்றதை உறுதி செய்துள்ளனர். இந்த தகவல்களையும் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது. பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்தியா அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story