தீவிரவாத முகாம் தாக்குதலுக்கு பிறகு பாரதீய ஜனதா செல்வாக்கு அதிகரிப்பு - கருத்து கணிப்பில் தகவல்


தீவிரவாத முகாம் தாக்குதலுக்கு பிறகு பாரதீய ஜனதா செல்வாக்கு அதிகரிப்பு - கருத்து கணிப்பில் தகவல்
x
தினத்தந்தி 5 March 2019 2:23 PM IST (Updated: 5 March 2019 4:02 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பிறகு உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணி கூடுதலாக 12 இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

லக்னோ,

மக்களவைத் தேர்தலில் 22க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து மகா பந்தனம் என்ற பெயரில் மெகா கூட்டணி அமைக்க எதிர்கட்சிகள் முடிவு செய்தன. இதற்காக டெல்லியில் ஆலோசனைக் கூட்டங்களும், பல்வேறு நகரங்களில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

இந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் விமானப்படைத் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு  இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 41 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. அதேசமயம் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். பாஜக மட்டுமின்றி காங்கிரசுக்கும் தற்போது உத்தரபிரதேசத்தில்  ஆதரவு அதிகரித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி 16 இடங்களிலும், சமாஜ்வாதி 18 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், இந்த கூட்டணியில் உள்ள அஜித் சிங்கின் கட்சி மற்றும் அப்னா தளம் கட்சிகள் தலா ஓரிடங்களில் வெற்றி பெறும். அதேசமயம் தனித்து போட்டியிடும் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெறும்.

விமானப்படைத் தாக்குதலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் சிஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. பாஜக கூட்டணி 29 இடங்களில் மட்டுமே வெல்லும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அதுபோலவே காங்கிரசும் 2 இடங்களில் மட்டுமே வெல்லும் என முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

பயங்கரவாதத்தை கையாள்வதில் எந்த அரசாங்கம் நேர்மையானது என்பதை நீங்கள் ஒப்பிட்டால்? என்ற கேள்விக்கு  மோடி அரசு 48. 99 சதவீதம் பேரும், மன்மோகன் சிங் அரசு என்று 11.62 சதவீதம் பேரும், இருவரும் என 10 .48 சதவீதம் பேரும் கருத்து இல்லை என 8.10 சதவீதம் பேரும் பதில் அளித்து உள்ளனர்.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மோடி அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா அல்லது அதிருப்தி அடைகிறீர்களா? என்ற கேள்விக்கு 

திருப்தி அடைவதாக 52.37 சதவீதம் பேரும்,அதிருப்தி என 20.35 சதவீதம் பேரும் கருத்து இல்லை என 27. 28 சதவீதம் பேரும் பதில் அளித்து உள்ளனர்.

Next Story