இந்துக்கள் குறித்தான அநாகரிகமான கருத்துக்கு கடும் கண்டனம், இம்ரான் கட்சி அமைச்சர் ராஜினாமா
இந்துக்கள் குறித்தான அநாகரிகமான கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இம்ரான் கட்சியின் அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்த ஃபயாஸுல் ஹசன் சோஹான், இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்தவர். சோஹான் அடிக்கடி சிறுபான்மையினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தவர். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்துக்கள் குறித்து அநாகரிகமான கருத்தை தெரிவித்தார். இந்துக்களை குறிவைத்து, ‘பசு சிறுநீரைக் குடிப்பவர்கள்’ என்று கிண்டலடித்திருந்தார், மேலும் இஸ்லாமியர்களுடன் ஒப்பிட்டு மோசமாக பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய முட்டாள்தனத்தை கட்சி சகித்துக் கொள்ளாது என இம்ரான் கான் கட்சி எச்சரித்துள்ளது.
பின்னர் மன்னிப்பு கோரிய சோஹான், இந்திய பிரதமர் மோடியையும், இந்திய ராணுவத்தையும்தான் விமர்சனம் செய்தேன். இந்துக்களை கிடையாது. என்னுடைய கருத்து இந்து சமூகத்தினரை புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், என்கருத்து பாகிஸ்தானில் உள்ள இந்து மக்களுக்கு எதிரானது கிடையாது என்றார். கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்தே அவருக்கு எதிர்ப்பு எழுந்தது, ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தன்னுடைய பதவியை சோஹான் ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story