அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் நியமனம்: சுப்ரீம் கோர்ட் இன்று பரிசீலனை
அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் நியமனம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று பரிசீலனை செய்கிறது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி – பாபர் மசூதி தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை சம்பந்தப்பட்ட 3 அமைப்புகள் சரிசமமாக பிரித்துக்கொள்ள அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 14 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல்சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வில் உள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மத்தியஸ்தம் மூலம் இந்த பிரச்சினையை ஏன் சுமுகமாக தீர்க்கக்கூடாது என்ற யோசனையை தெரிவித்தார்.
நீதிபதிகள் கூறும்போது, ‘‘நீங்கள் அனைத்து தரப்பும் எதிர்ப்பு இல்லை என்று கூறினால், மத்தியஸ்தம் குறித்து நாங்கள் தீவிரமாக பரிசீலிக்கிறோம். அதில் ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தால்கூட, நாங்கள் உங்களுக்கு மத்தியஸ்தம் வாய்ப்பு தர தயாராக இருக்கிறோம். இதுபற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம். எந்த மூன்றாவது தரப்பும் இதில் கருத்து தெரிவித்து, அதனால் முழு நடவடிக்கையும் பாதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை’’ என்றனர்.
அந்த யோசனையை சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் ராம் லல்லா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள், கடந்த காலத்தில் இதுபோன்ற பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக கூறி இந்த யோசனையை ஏற்கமறுத்தன. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெற உள்ளது. அப்போது மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story