இந்திய விமானப்படை தாக்குதல் விவகாரம் அரசியலில் புயலை கிளப்பும் சேட்டிலைட் புகைப்படம்!
இந்திய அரசியலில் புயலை கிளப்பும் வகையில் விமானப்படை தாக்குதல் தொடர்பாக சேட்டிலைட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்தது தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அரசியல் களேபரத்தை ஏற்படுத்தியது.
தேர்தலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையா? எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என எதிர்க்கட்சிகள் கேள்வியை எழுப்புகின்றனர். சில தலைவர்கள் ஆதாரம் கோரினர். இந்நிலையில் அரசியலில் புயலை கிளப்பும் வகையில் சேட்டிலைட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பின்னர் மார்ச் 4-ம் தேதி சேட்டிலைட் புகைப்படம் கிடைத்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படை தாக்குதல் (பிப்ரவரி 26-ம் தேதி) நடத்திய பின்னர் 6 நாட்கள் கழித்து ஜெய்ஷ் மதப்பள்ளி அமைந்திருந்த பகுதியில் பெறப்பட்ட சேட்டிலைட் புகைப்படம் கிடைத்துள்ளது. இதில் இந்திய விமானப்படைகள் இலக்காக நிர்ணயம் செய்த ஜெய்ஷ் கட்டிடம் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது என தெரிவித்துள்ளது.
பாலகோட்டின் ஜாபா கிராமத்தில் ஜெய்ஷ் முகாம் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சேட்டிலைட் புகைப்படங்கள் சான்பிரான்சிஸ்கோவை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிளாணட் லேப்ஸ் இன்ஸ் என்ற நிறுவனத்தால் எடுக்கப்பட்டது என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் இலக்கு தப்பியதா? என கேள்வி எழுப்பப்படுகிறது.
சேட்டிலைட் புகைப்படங்கள் ஆய்வில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஜெப்ரி லிவிஸ் பேசுகையில், “மிகவும் நேர்த்தியான இப்புகைப்படத்தில் கட்டிடங்கள் சேதம் அடைந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் தாக்குதல் அரசியல் லாபத்திற்கானதா? என சில எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலையில், இந்த சேட்டிலைட் புகைப்படம் இந்திய அரசியலில் ஒரு புயலை கிளப்பும் என்றே பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் கட்டிடம் சேதம் அடைந்துள்ளது, ஆனால் பெருமளவு இழப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story