கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.21 லட்சம் நன்கொடை அளித்த பிரதமர் மோடி
கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.21 லட்சம் தொகையை நன்கொடையாக பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
புதுடெல்லி,
மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், கும்பமேளா 6 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறும். அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கும்பமேளா ஜனவரி 15-ந் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுகள் புனித நீராடினர்.
கும்பமேளாவையொட்டி ஆற்றின் 8 கிலோ மீட்டர் வரை 40-க்கும் மேற்பட்ட இடங்களில் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாநில அரசு சுமார் ரூ.4 ஆயிரத்து 200 கோடி செலவிட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து, மருத்துவம், உணவு, தங்குமிடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாநில அரசு செய்து கொடுத்தது.
கும்பமேளாவில் உத்தரபிரதேசம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து புனித நீராடினர். வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததை அடுத்து பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர், போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டனர்.
கும்பமேளா தொடங்கி இதுவரை சுமார் 25 கோடிக்கும் மேல் பக்தர்கள் புனித நீராடி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பமேளா நேற்று முன் தினம் நிறைவு பெற்றாலும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று முறைப்படி அதனை அறிவித்தார்.
இந்நிலையில், கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குக்கு ரூ.21 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. தன்னுடைய சொந்த சேவிங்ஸ் கணக்கில் இருந்து அவர் பணத்தை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த பிப். 25-ம் தேதி கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த ஏராளமான துப்புரவுத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து துப்புரவுத் தொழிலாளர்கள் 5 பேரின் பாதங்களை பிரதமர் மோடி கழுவி அவர்களை கவுரவப்படுத்தினார். இதைத் தொடர்ந்து சிறந்த சேவையாற்றிய துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story