காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு ரேபரேலி - சோனியா காந்தி, அமேதி - ராகுல் காந்தி
காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ரேபரேலியில் சோனியா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
புதுடெல்லி,
காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ரேபரேலியில் சோனியா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
தேர்தல் தேதி
இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 17-வது நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் நடத்தியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திரா உள்பட சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்களும் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகளும் தயாராகி உள்ளன. ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளும் பெரும்பாலும் தொகுதி பங்கீடுகள் செய்துள்ளன. எந்த கட்சி, எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது தொடர்பாக சில ஆலோசனை கள் நடைபெற்று வருகிறது.
மோடி, ராகுல் பிரசாரம்
பா.ஜனதா கட்சியில் பிரதானமாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதோடு பா.ஜனதா தலைவர் அமித்ஷா வும் ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஏற்கனவே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். இந்த ஆண்டு அவருடன் பிரியங்கா காந்தியும் முழுநேர அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார். உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
முதல் வேட்பாளர் பட்டியல்
இந்நிலையில் காங்கிரஸ் தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டியின் பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் இதனை வெளியிட்டார்.
முதல் பட்டியலில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், குஜராத் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் 11 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சோனியா, ராகுல் போட்டி
குஜராத் மாநிலம் ஆமதாபாத் மேற்கு (எஸ்.சி) - ராஜூ பார்மர், ஆனந்த் - பாரத்சிங் எம்.சோலங்கி, வதோதரா - பிரசாந்த் பட்டேல், சோட்டா உதய்பூர் (எஸ்.டி) - ரஞ்சித் மோகன்சிங் ராத்வா,
உத்தரபிரதேச மாநிலம் ஷஹரண்பூர் - இம்ரான் மசூத், படோன் - சலீம் இக்பால் ஷெர்வானி, தவ்ரஹ்ரா - ஜிதின் பிரசாத், உன்னோவ் - அன்னு தாண்டன், ரேபரேலி - சோனியா காந்தி, அமேதி - ராகுல் காந்தி, பரூகாபாத் - சல்மான் குர்ஷித், அக்பர்பூர் - ராஜாராம்பால், ஜலான் (எஸ்.சி) - பிரிஜ்லால் காப்ரி, பைசாபாத் - நிர்மல் கத்ரி, குஷி நகர் - ஆர்.பி.என்.சிங்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story