ரபேல் ஒப்பந்த முறைகேடு: பிரதமர் மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும் ராகுல் காந்தி பேட்டி


ரபேல் ஒப்பந்த முறைகேடு: பிரதமர் மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும் ராகுல் காந்தி பேட்டி
x
தினத்தந்தி 8 March 2019 2:00 AM IST (Updated: 8 March 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி, 

ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மீது விசாரணை

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில கோப்புகள் ராணுவ அமைச்சகத்தில் இருந்து காணாமல்போய் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும், சில ஊடகங்கள் மீதும் விசாரணை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ரூ.30 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்ட சிலர் மீது மட்டும் விசாரணை நடத்தப்படவில்லை.

இது ஒரு தெளிவான ஊழல் வழக்கு. அந்த கோப்பில் இருந்த ஆவணங்கள் மூலம் பிரதமர் அலுவலகம் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக இணையான பேச்சுவார்த்தை நடத்தியது தெரியவந்துள்ளது. அப்படியானால் ஏன் பிரதமர் மீது குற்ற விசாரணை நடத்தக்கூடாது.

வராததற்கு யார் காரணம்?

கோப்புகள் காணாமல்போனது தொடர்பாக யார் மீதாவது நடவடிக்கை எடுத்தால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்தியதற்காக பிரதமர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை? மத்திய அரசின் ஒரே வேலை, காவலாளியை (பிரதமர் மோடி) காப்பாற்றுவது தான்.

ரபேல் விமானம் இந்தியா வருவதற்கு காங்கிரஸ் காரணம் என்று கூறினார். ஆனால் வெளியான கோப்பில், பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்தியதால் தான் உரியகாலத்தில் ரபேல் விமானம் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. எங்களிடம் அதற்கான ஆவணங்கள் இருக்கிறது. பிரதமர் அனில் அம்பானிக்கு உதவி செய்ய விரும்பியதால் தான் ரபேல் விமானம் உரியகாலத்தில் வந்துசேரவில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

பஞ்சாப் மாநிலம் மோகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “குருநானக் இந்த தேசத்துக்கு அன்பு மற்றும் சகோதரத்துவ வழியை காண்பித்தார். ஆனால் இன்று நாட்டில் உள்ள சூழ்நிலை வெறுப்பு மற்றும் கோபம் நிறைந்ததாக உள்ளது. பா.ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் குருநானக் வழிகாட்டலுக்கு எதிராக நாட்டில் வெறுப்பை பரப்புகிறார்கள்” என்றார்.

பா.ஜனதா கண்டனம்

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறும்போது, “கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தலைவர்கள் ரபேல் ஒப்பந்தம் குறித்து பேசிவருகிறார்கள். அவர்கள் உண்மைகள் என்று கூறுவது அத்தனையும் முழுமையாக தவறானது. இதில் அவர்களது எண்ணமும் தவறானது. ராணுவத்தின் ரகசிய குறிப்புகள் வெளியாகி உள்ளது. நாங்கள் பத்திரிகைகளை மதிக்கிறோம். அரசியல்சாசனத்தை நிறுவியவர்களே தேச பாதுகாப்புக்கு விதிவிலக்கு உள்ளது என்று கூறியுள்ளனர். கடந்த 72 வருடங்களாக அது மீறப்படவில்லை” என்றார்.

மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, “ராகுல் காந்தியின் அப்பட்டமான பொய்களை நான் கண்டிக்கிறேன். அவர் இந்திய விமானப்படையையோ, சுப்ரீம் கோர்ட்டையோ, தலைமை கணக்கு தணிக்கையரையோ நம்பவில்லை. பாகிஸ்தானில் இருந்து ரபேல் பற்றிய சான்றிதழ் வரவேண்டும் என நினைக்கிறார். இதற்கு நாங்கள் உதவ முடியாது” என்றார்.

Next Story