அயோத்தி நிலப்பிரச்சினை: மத்தியஸ்தர் மூலம் தீர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு


அயோத்தி நிலப்பிரச்சினை: மத்தியஸ்தர் மூலம் தீர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 8 March 2019 11:00 AM IST (Updated: 8 March 2019 11:00 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி நிலப்பிரச்சினையை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கை அலகாபாத் ஐகோர்ட்டு விசாரித்து, வழக்கில் தொடர்புடைய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் நிலுவையில் உள்ளன.இந்த நிலையில், மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட்டு எழுப்பியது. இதை நிர்மோகி அகாரா தவிர்த்த பிற இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன. முஸ்லிம் அமைப்புகள் ஏற்கின்றன.

இது தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கியது. அதில், அயோத்தி விவகாரத்தில்  மத்தியஸ்தம் செய்ய குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு  அமைக்கப்பட்டுள்ளது. கலிஃபுல்லா தலைமையிலான இந்த குழுவில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இடம் பெறுவர் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

அயோத்தி சமரச பேச்சு வார்த்தை விவரங்களை ஊடகங்கள் வெளியிட தடை விதித்தும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்தில் பேச்சு வார்த்தையை தொடங்கி 8 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Next Story