பாறைகளில் விளம்பரம் செய்வதை தடுப்பது குறித்து அறிக்கை வேண்டும் - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பாறைகளில் விளம்பரம் செய்வதை தடுப்பது குறித்து அறிக்கை வேண்டும் - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 March 2019 4:15 AM IST (Updated: 9 March 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

மேம்பாலங்கள், பாறைகள், நெடுஞ்சாலைகளில் விளம்பரம் செய்வதை தடுப்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

வக்கீல் யானை ஜி.ராஜேந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புகள், மேம்பாலங்கள், பாறைகள் போன்றவற்றில் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதுதொடர்பாக ஆய்வு செய்ய ஏற்கனவே கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அரசு அதிகாரிகள் பின்பற்றவில்லை. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு 2017-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு தடை விதித்து, ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர், தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தமிழகத்தின் 17 அரசியல் கட்சிகளும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அப்துல் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் யானை ராஜேந்திரன் நேரில் ஆஜராகி இதுதொடர்பாக பல்வேறு புகைப்படங்களை நீதிபதிகளுக்கு வழங்கினார்.

மேலும் 2006-ம் ஆண்டில் ஐகோர்ட்டில் தான் தொடர்ந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், விரைவில் தேர்தல்கள் நடக்க இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுபோன்று விளம்பரங்கள் செய்யும் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு நீதிபதிகள் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மலைகள், குன்றுகள், பாறைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து பல்வேறு வண்ணங்களில் அரசியல் கட்சிகளின் கோஷங்கள், தலைவர்களின் படங்கள் மற்றும் விளம்பரங்களை எழுதுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதுபோல சுற்றுச்சூழலை பாழடிப்பதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு வக்கீலிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Next Story