அயோத்தி வழக்கில் தீர்வு காண சமரச குழுவில் இடம்பெற்ற 3 பேருமே தமிழர்கள்


அயோத்தி வழக்கில் தீர்வு காண சமரச குழுவில் இடம்பெற்ற 3 பேருமே தமிழர்கள்
x
தினத்தந்தி 9 March 2019 4:30 AM IST (Updated: 9 March 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி வழக்கில் தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சமரச குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேருமே தமிழர்கள் ஆவார்கள்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த நிலத்தை சுமுகமாக பிரித்து கொள்வதில் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த 3 பேர் கொண்ட சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

இந்த குழுவில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

இப்ராகிம் கலிபுல்லா

சமரச குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள இப்ராகிம் கலிபுல்லா, சிவங்கங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர். 1951-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி பிறந்த இவருடைய இயற்பெயர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா. இவர் 1975-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்தார். நீண்டகாலமாக வக்கீலாக பணியாற்றி அனுபவம் வாய்ந்த இவர் பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு உள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக கலிபுல்லா நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் காஷ்மீர் மாநில பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இவர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதி ஆனார். 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பொறுப்பேற்ற கலிபுல்லா, 2016-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். அதை தொடர்ந்து பல்வேறு சட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஸ்ரீரவிசங்கர்

சமரச குழுவில் இடம்பெற்றுள்ள ஆன்மிக குரு ஸ்ரீரவிசங்கர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு பிறந்தார். 1981-ம் ஆண்டு வாழும் கலை அமைப்பை நிறுவினார். அதை தொடர்ந்து 1987-ம் ஆண்டு ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு சர்வதேச மனித மதிப்புக்கான அமைப்பை தொடங்கினார்.

நீண்டகாலமாகவே அயோத்தி வழக்கில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் வக்பு வாரியங்கள் மற்றும் ராமஜென்ம பூமி அமைப்பினருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய ஆலோசனைகள் பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சமரச குழுவில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளதால் இந்த பிரச்சினையை தீர்க்க மேலும் முனைப்போடு அவர் செயல்பட வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீராம் பஞ்சு

மூத்த வக்கீலான ஸ்ரீராம் பஞ்சு சென்னையை சேர்ந்தவர். மும்பை சட்டக்கல்லூரியில் பயின்ற இவர் 1976-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக தன் பணியை தொடங்கினார். 2005-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் முதன் முதலாக சமரச மையத்தை தொடங்கினார். பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு உதவிடும் வகையில் சமரச பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்ட அனுபவம் கொண்டவர். மூத்த வக்கீலான அவர் சட்ட நுணுக்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தையை அணுகுவதில் திறமை படைத்தவர். சமரச மையம் நடத்தி வரும் இவர் அது தொடர்பாக புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

இந்திய சமரச பேச்சாளர்கள் கழகத்தின் தலைவராகவும், சர்வதேச சமரச பேச்சாளர்கள் கழக நிர்வாக குழு இயக்குனராகவும் இவர் உள்ளார். சிங்கப்பூர் சர்வதேச சமரச மையம் இவரை தங்கள் குழுவில் ஒருவராக நியமித்து உள்ளது. அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு இடையே உள்ள நிலப்பரப்பை பங்கிட்டு கொள்வதில் நீண்ட காலமாக இருந்த சட்டப்பிரச்சினையை தீர்க்க இவரை தான் சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. மேலும் மும்பையில் பார்சி சமூகத்தினரின் பொது பிரச்சினையை தீர்க்க இவருடைய உதவியை சுப்ரீம் கோர்ட்டு நாடியது.

சமரச குழுவில் இடம் பெற்றது குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா கூறுகையில், “அயோத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” என்றார்.

ஆன்மிக குரு ஸ்ரீரவிசங்கர் டுவிட்டரில், “ஒவ்வொருவரின் உணர்வுகளையும் தான் மதிப்பதாகவும், சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்க நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.

மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு வெளியிட்ட அறிக்கையில், “சுப்ரீம் கோர்ட்டு மிகப்பெரிய பொறுப்பை வழங்கி உள்ளது. இந்த பணியை நான் சிறப்பாக செய்வேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.


Next Story