ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது, 7 தொகுதிகளிலும் வெற்றிப்பெற வேண்டும் - ராகுல் காந்தி
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது. பா.ஜனதாவிற்கு எதிரான கொள்கையில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒரு வரிசையில் வருகிறது. எனவே, இரு கட்சிகளும் டெல்லியில் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் கெஜ்ரிவாலால் ஆட்சியைவிட்டு அகற்றப்பட்ட ஷீலா தீட்சித்திற்கு கூட்டணியில் நாட்டம் இல்லை என தகவல் வெளியாகியது.
இதற்கிடையே பல்வேறு யோசனைகளுடன் ஆம் ஆத்மி பேச்சுவார்த்தையை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் கூட்டணியில்லையென 6 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்தது. ஒரு தொகுதியை வைத்திருந்தது. காங்கிரசுக்கு இரண்டு தொகுதி வரையில் தரவும், பஞ்சாப்பில் கூட்டணி வைக்கவும் ஆம் ஆத்மி முன்வந்தது.
ஆனால் டெல்லி காங்கிரஸ் தலைமையில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க நேர்மறையான கருத்து எழவில்லை. மார்ச் 5-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஷீலா தீட்சித் பேசுகையில், “ஆம் ஆத்மியுடன் கூட்டணியில்லை, இது இறுதியானது. இந்த முடிவை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்,” என கூறினார். இருப்பினும் மத்திய தலைமையினால் கூட்டணி ஏற்படலாம் எனவும் கூறப்பட்டது.
இப்போது அதற்கான கதவை ராகுல் காந்தி மூடியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்கள் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிப்பெற பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கெஜ்ரிவால், காங்கிரஸ் அகங்காரம் பிடித்தது, டெபாசிட் கூட பெறாது என விமர்சனம் செய்து இருந்தார்.
Related Tags :
Next Story