பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி: சிதம்பரம் விமர்சனம்
பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி என சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கொண்ட ரூ.500, 1000 தாள்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெங்கடேஷ் நாயக் என்பவர், தகவல் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்.
இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ”கருப்பு பணம் ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பது ஆகியவை வரவேற்க தக்க நடவடிக்கைதான். ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறிது காலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் பெரும்பாலான கருப்பு பணம் ரொக்கப்பணமாக இல்லை. அவை தங்கமாகவும், வீட்டு மனை வீடு என நிலமாகவும் உள்ளன. எனவே, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை கருப்பு பண ஒழிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் இது குறித்து கூறியிருப்பதாவது, “பண மதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த உத்தி. ரிசர்வ் வங்கி அறிவுரையையும் மீறி அரசு எடுத்த முரட்டுத்தனமான முடிவு இது. இந்த நடவடிக்கையால் எத்தனை சிறு தொழில்கள் நசிந்தன. எத்தனை பேர் வேலை இழந்தார்கள்?” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story