ஹேக்கிங் செய்யப்பட்டு 10 நாட்களாகியும் செயல்பாட்டிற்கு வராத பா.ஜனதா இணையதளம்!


ஹேக்கிங் செய்யப்பட்டு 10 நாட்களாகியும் செயல்பாட்டிற்கு வராத பா.ஜனதா இணையதளம்!
x
தினத்தந்தி 14 March 2019 9:25 AM GMT (Updated: 14 March 2019 9:25 AM GMT)

ஹேக்கிங் செய்யப்பட்டு 10 நாட்களாகியும் பா.ஜனதா இணையதளம் செயல்பாட்டிற்கு வரவில்லை.


பா.ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டு, பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையிலான மீம்ஸ் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் கைகுலுக்க கையை நீட்டுவார். ஆனால், அதனை கண்டுகொள்ளாத மெர்கல், மோடியை இரு நாட்டின் தேசியக்கொடி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வார். இந்த வீடியோ பா.ஜனதாவின் இணையதளத்தில் மோசமான வாசகங்களுடன் இடம் பெற்றது.

வீடியோவுக்கு கீழே போஹேமியன் ராப்சோடி வீடியோவும் இடம் பெற்றது. இதனையடுத்து பா.ஜனதா இணையதளத்தின் சேவை கடந்த 5-ம் தேதி காலை துண்டிக்கப்பட்டது. 

“விரைவில் இணையதளம் செயல்பாட்டுக்கு வரும், இணையதளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது,” என தெரிவிக்கப்பட்டது. இப்போது 10 நாட்கள் ஆகியும் இணையதளம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதனை விமர்சனம் செய்யும் வகையில் டுவிட்டரில் மீம்ஸ்கள் பரவுகிறது. இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா என்றும், இணையதளத்தின் தகவல்களை முன்னாள் பிரதமர் நேரு திருடி விட்டார் எனவும் கேலி செய்யும் வகையில் மீம்ஸ் பரவுகிறது.

ஆனால் பா.ஜனதா தரப்பில், “இணையதளத்தை சில மணி நேரங்களில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இந்த நேரத்தை எங்களுடைய இணையதளத்தை புதுப்பிக்க கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறோம்.

இணையதளத்தை புதுப்பிக்க கடந்த 3 மாதங்களாகவே திட்டமிட்டு இருந்தோம். புதிய தொழில்நுட்பம் எதுவும் 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை. இணையதளத்தை ஹேக்கிங் செய்ய முடியாத வகையில் நடவடிக்கையை மேற்கொள்கிறோம்,” என தெரிவிக்கப்படுகிறது.

Next Story