50% வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு


50% வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 15 March 2019 6:15 AM GMT (Updated: 15 March 2019 6:19 AM GMT)

50% வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2017-ல் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது.  இதில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு பா.ஜ.க.வுக்கு வாக்குகள் அதிகம் விழும்படி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.

இதன் தொடர்ச்சியாக வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.  இந்த விவகாரத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது.

இதில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தும் வகையில், விவிபாட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் சீட்டு எந்திரத்தை, மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் வைக்கவுள்ளது. 

இந்த நிலையில், 50 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டுக்களை எண்ணக்கோரி  காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி  உள்ளிட்ட 23  கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் உதவுவதற்காக ஒரு மூத்த அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் என கோரிய உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Next Story