டெல்லியில் மத்திய அரசுடன் பட்டாசு தயாரிப்பாளர்கள் ஆலோசனை மாசு குறைந்த பட்டாசுகளை தயாரிக்க முடிவு


டெல்லியில் மத்திய அரசுடன் பட்டாசு தயாரிப்பாளர்கள் ஆலோசனை மாசு குறைந்த பட்டாசுகளை தயாரிக்க முடிவு
x
தினத்தந்தி 16 March 2019 4:30 AM IST (Updated: 16 March 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மத்திய அரசுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது, மாசு குறைந்த பட்டாசுகளை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரம் என குறைத்தது. இதேபோல் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களில் 40 நிமிடம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்தது.

மேலும் பேரியம் உப்பு, சல்பர் போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளையும் விதித்தது.

டெல்லியில் ஆலோசனை

இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி தமிழக அரசும் சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, நாடு முழுவதும் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள், முகவர்கள் ஆகியோருடன், மாசு குறைந்த பாதுகாப்பான பட்டாசுகளை தயாரிப்பது குறித்து பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று டெல்லியில் மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சைலேந்திர சிங் தலைமையில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனத்தின் முதன்மை அதிகாரி எம்.கே.ஜாலா, துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன், பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பட்டாசு விற்பனை முகவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாசு குறைந்த பட்டாசு

இந்த கூட்டத்தில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் மையம் ஏற்கனவே பரிந்துரைத்த மூலப்பொருட்களை கொண்டு மாசு குறைந்த பட்டாசு தயாரிப்பது பற்றி அதிகாரிகளால் விளக்கப்பட்டது. இந்த மையம் பரிந்துரைத்த மூலப்பொருட்களை கொண்டு நாடு முழுவதும் மாசு குறைந்த பட்டாசு தயாரிக்க பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்படி தயாரிக்கும் பட்டாசுகள் மீது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் மையத்தின் இலச்சினை, பார் கோடு ஆகியவை அச்சிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு பரிந்துரைத்த மூலப்பொருட்களை கொண்டு மாசு குறைந்த பட்டாசுகளை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் வெகுவிரைவில் மாசு குறைந்த பட்டாசுகள் தயாரிக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி தொடங்க இருப்பதாக பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஏப்ரல் 3-ந் தேதி விசாரணை

இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற ஏப்ரல் 3-ந் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. அப்போது நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு கோர்ட்டுக்கு தெரிவிக்கும் என்றும் தெரிய வருகிறது.

Next Story