தேசிய செய்திகள்

24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் முலாயம்சிங்- மாயாவதி தேர்தல் பிரசாரம் + "||" + Mayawati set to share dais with Mulayam

24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் முலாயம்சிங்- மாயாவதி தேர்தல் பிரசாரம்

24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் முலாயம்சிங்- மாயாவதி தேர்தல் பிரசாரம்
24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் முலாயம்சிங்- மாயாவதி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் நிரந்தர பகையாளிகளாக இருந்து வந்த  சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும்  இதற்கு முந்தைய பல சட்டசபை தேர்தல்களில்  தனித்தனியே போட்டியிட்டன.

கடந்த சட்டசபை தேர்தலில்   அதேபோல தனியாக போட்டியிட்டதால் அது பாரதீய ஜனதாவுக்கு வாய்ப்பாக அமைந்தது. அங்கு பா.ஜ.க. பெரும் வெற்றியை பெற்று ஆட்சியை அமைத்தது.

முன்னதாக நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சிக்குமே பொது எதிரியாக பாரதீய ஜனதா உள்ளது. எனவே பாரதீய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இரு கட்சிகளும்  இப்போது அங்கு கூட்டணி அமைத்துள்ளன.

கடந்த காலத்தில் கூட ஒரு தடவை சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்த வரலாறு உண்டு. 1992-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டதை காரணம் காட்டி பாரதீய ஜனதா ஆட்சி கலைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு 1993-ம் ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் ராமர் கோவில் பிரச்சனையால் பாரதீய ஜனதா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த வெற்றியை தடுக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்தன. அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராம் உயிரோடு இருந்தார். அவர்தான் இந்த கூட்டணியை உருவாக்கினார்.

தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முலாயம் சிங் முதல்-மந்திரி ஆனார். ஆனால் 1995-ம் ஆண்டு அதாவது ஆட்சி அமைந்த 1½ ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி திடீரென முலாயம்சிங்குக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று விட்டது.

அப்போது லக்னோவில் விடுதி ஒன்றில் மாயவதி தங்கி இருந்தார். அவரை சமாஜ்வாதி தொண்டர்கள் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இது மாயாவதிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஒருபோதும் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேரவே இல்லை. இரு கட்சிகளுமே நிரந்தர பகையாளி போல செயல்பட்டு வந்தன. அதே நேரத்தில் மாயாவதி பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்து 3 தடவை ஆட்சி அமைத்தார்.

ஆனால் இப்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு சமாஜ்வாதி கட்சியுடன் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார்.  இதுவரை சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங்கை கடுமையாக விமர்சித்து வந்த மாயாவதி  இப்போது அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த தேர்தலில் முலாயம்சிங் யாதவ் மைன்புரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரை ஆதரித்து மாயாவதி வருகிற 19-ந் தேதி மைன்புரியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதில் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக்தள தலைவர் அஜித்சிங் ஆகியோரும் பங்கேற்கின்றார்கள். 24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி, முலாயம்சிங்குக்காக ஓட்டு கேட்கும் நிலை உருவாகி உள்ளது. அவர் என்ன பேசப்போகிறார் என்பதை உத்தரபிரதேச மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாதி கூட்டணி அமைத்ததை முலாயம்சிங் விரும்பவில்லை. இரு கட்சிகளும் தொகுதிகளை பிரித்து கொண்டபோது, சமாஜ்வாதி கட்சியை விட பகுஜன் சமாஜ் கூடுதலாக ஒரு தொகுதியை பெற்றது. இது முலாயம்சிங்குக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதுபற்றி எதிரான கருத்துக்களையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில் தான், முலாயம்சிங்குக்காக மாயாவதி பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும், முலாயம்சிங்குக்கு கட்சி தொண்டர்கள் உரிய கவுரவம் அளித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி போஸ்டர்களில் கன்சிராமுக்கு இணையாக முலாயம்சிங் படமும் இடம்பெற வேண்டும் என்றும்  அவர்  உத்தரவிட்டுள்ளார்.  மாயாவதியும் அகிலேஷ் யாதவும் 11 இடங்களில் ஒன்றாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர் .

தொடர்புடைய செய்திகள்

1. 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
2. பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி
பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
3. ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா?
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
4. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
5. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.