சீட் கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.க.வுக்கு தாவும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் - மம்தா அதிர்ச்சி


சீட் கிடைக்காத அதிருப்தியில் பா.ஜ.க.வுக்கு தாவும்  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் - மம்தா அதிர்ச்சி
x
தினத்தந்தி 16 March 2019 10:51 AM GMT (Updated: 16 March 2019 10:51 AM GMT)

சீட் கிடைக்காத அதிருப்தியில் மாற்று கட்சிகளுக்கு படையெடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் - மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கொல்கத்தா,

 மக்களவை  தேர்தலில்  திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் தற்போது பதவியில் இருக்கும் எம்.பி.க்கள் 10 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதற்கு மாறாக, பெண்களின் வாக்குகளை கவர்வதற்காக கூடுதலாக பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் மம்தா பானர்ஜி. இதனால், இந்த முறை புதிய முகங்கள் 18 பேர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

கூச்பெஹர், பஷிரசத், ஜார்கிரம், மெதினிபூர், போல்புர், பிஷ்னுபுர், கிருஷ்ணா நகர் ஆகிய தொகுதிகளில் இப்போது இருக்கும் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பொறுமை காத்த பா.ஜ.க., இப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களை அரவணைத்துக் கொண்டு, அவர்களுக்கு சீட்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் வலுவான போட்டியை அளிக்க முடியும்.

அந்த கட்சியின் முன்னாள் தலைவர்களை வைத்தே அந்த கட்சிக்கு எதிராக பணியாற்றி தோற்கடிக்க முடியும் என்று பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகத் தொண்டர்களாக இருந்தவர்கள், இந்த முறை சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், திரைப்பட நடிகைகளுக்கு சீட் தந்துள்ளார் மம்தா பானர்ஜி. இதனால் அதிருப்தி அடைந்த சிலர் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சவுமித்ரா கான், அனுபம் ஹஸ்ரா, மூத்த தலைவர் அர்ஜுன் சிங் ஆகியோருக்கு இந்த முறை திரிணாமுல் காங்கிரஸில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களில் அதிகமான அளவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர்வார்கள் என்று அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு தினாஜ்புர் திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிப்லப் மித்ரா முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடும் அதிருப்தியில் உள்ளார். கூச்பெஹார் தொகுதியின் எம்.பி. பர்தா பிரதிம் ராய்க்கு பதிலாக இடதுசாரியில் இருந்து விலகி கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிரேஷ் சந்திர அதிகாரிக்கு மம்தா பானர்ஜி வாய்ப்பு வழங்கியுள்ளார்.

மம்தாவின் இந்த செயலால் பார்தா பிரதிம் ராய் கடும் கோபத்திலும், அதிருப்தியிலும் இருக்கிறார். இதனால், இவரை அணுகி தங்கள் பக்கம் இழுக்க  பா.ஜ.க. வலைவீசி வருகிறது. அடுத்த சில நாட்களில்  இவர் பா.ஜ.க. பக்கம் செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மால்டா வடக்கு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த மவுசம் பெனாசிர் நூருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் மம்தா பானர்ஜி. மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களுக்குக் கூட இந்த முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றிய தொண்டர்களுக்கு சீட் இல்லை என்று ஆதங்கத்துடன் அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முர்ஷிதாபாத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பு தலைவர் ஷாமிக் ஹூசைனுக்கு வாய்ப்பு தராமல் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அபுதாஹிருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு தராமல் அதிக அளவில் பெண்களுக்கும், மாற்று கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மம்தா பானர்ஜி மீது அந்த கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க. சில ஆசை வார்த்தைகளை கூறி எங்கள் கட்சியில் சிறு அதிருப்தியில் இருப்பவர்களை இழுக்கப் பார்க்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.

என்னுடைய கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மீது முழுமையாக நம்பிக்கை இருக்கிறது. கட்சியின் கொள்கைகளுக்கும், ஒழுக்கத்துக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்று நம்புவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Next Story