‘உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றாமல் செல்போனில் படம் பிடித்தனர்’ - மும்பை நடைமேம்பால விபத்தில் காயமடைந்தவர் வேதனை


‘உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றாமல் செல்போனில் படம் பிடித்தனர்’ - மும்பை நடைமேம்பால விபத்தில் காயமடைந்தவர் வேதனை
x
தினத்தந்தி 17 March 2019 2:17 AM IST (Updated: 17 March 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

‘உயிருக்கு போராடியவர்களை காப்பாற்ற முயற்சி செய்யாமல், பலர் செல்போனில் படம் பிடித்து கொண்டு இருந்தனர்’ என மும்பை நடைமேம்பால விபத்தில் காயமடைந்தவர் வேதனையுடன் கூறினார்.

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகில் கடந்த 14-ந் தேதி நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 3 நர்சுகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரி மற்றும் ஜி.டி. ஆஸ்பத்திரி உள்ளது. ஆனால் விபத்தில் சிக்கியவர்கள் பலர் 30 நிமிடங்களுக்கு பிறகு தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் மாநகராட்சி தலைமையகம் இருந்தும் கூட மீட்பு படையினர் 20 நிமிடங்கள் கழித்து தான் சம்பவ இடத்துக்கு சென்று உள்ளனர்.

இது குறித்து விபத்தில் சிக்கி காயமடைந்த வாலிபர் ஒருவர் கூறியதாவது:-

நடைமேம்பாலம் இடிந்து கீழே விழுந்தபோது எனது காலில் படுகாயம் ஏற்பட்டது. எனவே என்னால் நடக்க முடியவில்லை. இடிபாடுகளில் சிக்கி என் கண் முன்னேயே சிலரது உயிர் பிரிந்தது. அப்போது, அங்கு சுற்றி இருந்தவர்கள் படுகாயங்களுடன் போராடியவர்களை காப்பாற்ற முயற்சி செய்யாமல் தங்களது செல்போனில் படம் பிடித்து கொண்டு இருந்தனர்.

இதற்கிடையே திருட்டு கும்பலை சேர்ந்த சிலர் காயமடைந்தவர்களின் பணப்பை, செல்போன்களை எடுத்து சென்றனர். இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.


Next Story