மராட்டியத்தில் துணிகரம்: ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள்


மராட்டியத்தில் துணிகரம்: ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 18 March 2019 3:00 AM IST (Updated: 18 March 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலம் புனேயில் ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்றனர்.

புனே,

மராட்டிய மாநிலம் புனே போசரி போராடே வஸ்தி பகுதியில் பொதுத்துறை வங்கி ஒன்றுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்றுமுன்தினம் காலை அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தார்.

அவர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றபோது, அங்கு ஏ.டி.எம். எந்திரம் மாயமாகி இருப்பதை கண்டு திடுக்கிட்டார். ஏ.டி.எம். எந்திரம் பெயர்க்கப்பட்டு இருப்பதற்கான சுவடு இருந்தது. இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசாரும், வங்கி அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பணத்துடன் ஏ.டி.எம். எந்திரம் கொள்ளைபோனது தெரியவந்தது.

நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கண்காணிப்பு கேமரா வயர்களை துண்டித்துவிட்டு, கியாஸ் கட்டர் மூலம் வெட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து அலாக்காக தூக்கி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றது தெரிந்தது.

கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.30 லட்சம் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துணிகர கொள்ளையில் 4 முதல் 5 பேர் வரை ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கூறினர்.

இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா வயர்களை கொள்ளையர்கள் துண்டித்து சென்று விட்டதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.


Next Story