டுவிட்டரில் பெயரை மாற்றினார், பிரதமர் மோடி - அமித்ஷா, மத்திய மந்திரிகளும் பெயர் மாற்றம்


டுவிட்டரில் பெயரை மாற்றினார், பிரதமர் மோடி - அமித்ஷா, மத்திய மந்திரிகளும் பெயர் மாற்றம்
x
தினத்தந்தி 17 March 2019 11:30 PM GMT (Updated: 17 March 2019 9:41 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். அவரைப் பின்பற்றி அமித் ஷா, மத்திய மந்திரிகளும் பெயர் மாற்றம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இருந்தபோதும், தன்னை நாட்டின் காவலாளி என்று சொல்லிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அவர் ‘சவ்கிதார்’ என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால் ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் காவல்காரரே திருடராக மாறி விட்டார் என அவரை கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதிலடி தருகிற விதத்தில் ‘மைன் பி சவ்கிதார்’ (நானும் காவலாளிதான்) என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார்.

இதையொட்டி டுவிட்டரில் நரேந்திர மோடி என்ற பெயரில் பதிவுகள் வெளியிட்டு வந்த அவர் இப்போது ‘சவ்கிதார் நரேந்திர மோடி’ என பெயர் மாற்றம் செய்துள்ளார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், “உங்கள் காவலாளி உறுதிபட நிற்கிறேன். நாட்டுக்கு சேவை ஆற்றுகிறேன். ஆனால் நான் தனி ஒருவன் இல்லை” என்று கூறி உள்ளார்.

பிரதமர் மோடியை டுவிட்டரில் மிக அதிக எண்ணிக்கையிலானவர்கள் பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றி பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷாவும் டுவிட்டரில் தனது பெயருக்கு முன்பாக சவ்கிதார் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டுள்ளார்.

இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாம் நமது இதயத்தில் இருந்து பேசுவோம். நாம் காவலாளி நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மந்திரிகள் ஜே.பி. நட்டா, பியூஸ் கோயல், சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான் மற்றும் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் டுவிட்டரில் தங்கள் பெயரை மாற்றம் செய்த தலைவர்கள் வரிசையில் சேர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக வர்த்தக துறை மந்திரி சுரேஷ் பிரபு டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “யார் இந்தியாவை அழுக்கு, ஊழல், சமூக தீங்குகள் ஆகியவற்றில் இருந்து விடுவிப்பதற்கு முயற்சி எடுத்தாலும் அவர் காவலாளிதான்” என குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் ‘மைன் பி சவ்கிதார்’ (நானும் காவலாளிதான்) இயக்கத்தால் அக்கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் மோதல் நிலவுகிறது.

டுவிட்டரில் அம்பானிகாசேலா என்ற பெயரில், நிரவ் மோடி பெயரிலும் பாரதீய ஜனதா கட்சியின் பிரசாரம் இடம்பெற்றுள்ளது. அதற்கு நிரவ் மோடி பெயரிலான மற்றொரு போலி கணக்கில், “தயவு செய்து என் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள்” என பதிவிடப்பட்டுள்ளது.

இதை காங்கிரஸ் கட்சி, “மோடி இன்னும் தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதை பார்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது” என கூறி கிண்டல் செய்துள்ளது.

இதற்கு பாரதீய ஜனதா கட்சி பதிலடியாக, “அன்புள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே.. நேர்மையின்மை, மோசடி, போட்டோஷாப் பயன்படுத்தி உருவாக்கிய படங்கள், போலி செய்தி ஆகியவைதான் உங்களது அடையாளம். பல்லாண்டுகளாக உங்கள் தலைவர்கள் இந்தியாவை கொள்ளையடிப்பதற்கு அந்த தொழில்நுட்பங்களைத்தான் பயன்படுத்தினார்கள். காங்கிரசின் இந்த கலாசாரத்துக்கு எதிராக இந்தியா விழிப்புணர்வுடன் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இப்படி காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் ஒன்றுக்கொன்று சமூக வலைத்தளம் மூலமாக பதிலடி தந்து மோதுவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story