கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் காங்கிரஸ் மனு


கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் காங்கிரஸ் மனு
x
தினத்தந்தி 18 March 2019 8:29 AM GMT (Updated: 18 March 2019 8:29 AM GMT)

கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளனர்.

பனாஜி,

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். மனோகர் பாரிக்கர் இறந்தவுடன் இருமுறை கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து ஆலோசனை நடத்தின. அதன்பின் டெல்லியில் இருந்து வந்த மூத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக கூட்டணி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், கூட்டணிக் கட்சியில் ஒன்றான மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியும், கோவா ஃபார்வர்ட் கட்சியும் முதல்வர் பதவியைக் கேட்டு வருவதால், பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வருகிறது. 

இதற்கு மத்தியில், பாஜக பெரும்பான்மைக்கு போதிய எண்ணிக்கை இல்லை எனக் கூறிவரும் காங்கிரஸ், ஆளுநர் மிருதுளா சின்காவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி மனு அளித்துள்ளது. 

40 தொகுதிகளை கொண்ட கோவாவில், 14 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 12-ஆகக் குறைந்தது. அதேநேரத்தில் காங்கிரசுக்கு 14 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில்  உள்ளனர். 40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவையில், தற்போது 4 தொகுதிகள் காலியாக உள்ளது.

ஆளுநர் மிருதுளா சின்காவை சந்தித்த பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்திரகாந்த் கவேல்கர் கூறுகையில், கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளோம்.  நாங்கள்தான் தனிப்பெரும் கட்சியாக உள்ளோம். எங்களிடம் 14 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே, எங்களைதான் முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளோம் எனவும் அவரிடம் கூறியுள்ளோம்” என்றார்.

Next Story