அதிமுகவில் இப்போது ஆளுமையுள்ள தலைவர் கிடையாது, பா.ஜனதாவுக்கு முக்கியத்துவம் ஏன்? ராஜ கண்ணப்பன்


அதிமுகவில் இப்போது ஆளுமையுள்ள தலைவர் கிடையாது, பா.ஜனதாவுக்கு முக்கியத்துவம் ஏன்? ராஜ கண்ணப்பன்
x
தினத்தந்தி 18 March 2019 1:07 PM GMT (Updated: 18 March 2019 1:07 PM GMT)

பா.ஜனதாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என ராஜ கண்ணப்பன் கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதிமுகவில்  ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த ராஜகண்ணப்பன், சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முயற்சித்து வந்தார். ஆனால் இரு தொகுதிகளும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பா.ஜனதாவிடம் சென்றுவிட்டது. இதனையடுத்து யாதவ சமூகத்தினர் கணிசமாக உள்ள மதுரை தொகுதியை பெற அவர் முயற்சி செய்தார். ஓ பன்னீர்செல்வம் தேனி தொகுதியில் தனது மகன் ரவீந்திரநாத்தை களமிறக்கியுள்ளார். மதுரை தொகுதி வி.வி.ஆர்.ராஜ்சத்யனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜகண்ணப்பன் அதிருப்தி அடைந்தார். கட்சிக்குள்ளே வேட்பாளர்கள் நிறுத்தம் தொடர்பாக அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் திமுகவுக்கு ராஜகண்ணப்பன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ராஜகண்ணப்பன் ஆதரவை தெரிவித்தார். 

அதிமுகவில் உட்கட்சிப்பூசல் நிறைய உள்ளது. ஒரு குடும்பத்திற்காக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், மகனுக்காக சீட் வாங்க போராடியது ஏன்? என கேள்வி எழுப்பிய ராஜ கண்ணப்பன், ஓ.பன்னீர்செல்வம் தூரோகம் செய்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டனர். அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் தொண்டர்கள் இல்லை. திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தில் நோட்டாவை வெற்றிக்கொள்ள முடியாத பா.ஜனதாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? தென்மாவட்டங்களில் 4 தொகுதிகளை பா.ஜனதாவிற்கு கொடுக்க வேண்டிய அவசியம் ஏன்? என காட்டமான கேள்விகளை எழுப்பிய அவர், இப்போதைய தலைவர்கள் கைகளை கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். திமுக கூட்டணியை ஆதரித்து மதுரையில் பிரசாரம் செய்வேன். ப.சிதம்பரத்திற்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்வேன் என கூறியுள்ளார். 
 
கடந்த 2009 தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட அவர், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story