கோவா அரசியலில் அதிரடி திருப்பம்: “புதிய முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு” இரவு பதவி ஏற்பதாக தகவல்


கோவா அரசியலில் அதிரடி திருப்பம்: “புதிய முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு” இரவு பதவி ஏற்பதாக தகவல்
x
தினத்தந்தி 18 March 2019 8:21 PM IST (Updated: 18 March 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

கோவா அரசியலில் அதிரடி திருப்பமாக புதிய முதல்-மந்திரியாக பிரமோத சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரவு முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவா,

கோவா அரசியலில் அதிரடி திருப்பமாக புதிய முதல்-மந்திரியாக  பிரமோத் சாவந்த் தேர்வாகியுள்ளார். அவர் தற்போது கோவா சபாநாயகராக இருந்து வருகிறார். 

கோவாவில் முதல்-மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கல் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இன்று மாலை 5 மணியவில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பாரிக்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன்  மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே அடுத்த கோவா முதல்-மந்திரியாக அடுத்து யாரை நியமிப்பது என்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தன.

 காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனால் கோவா அரசியலில் கடந்த 2 நாட்களாக குழப்பம் பெரும் அளவில் அதிகரித்திருந்தது. 

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத அளவில், கோவா சபாநாயகராக இருந்த  பிரமோத் சாவந்த்தை முதல்-மந்திரியாக நியமிக்க பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு கூட்டணி கட்சிகளான மகாராஷ்டிராவதி கோமந்தக் கட்சி, கோவா முன்னணி கட்சி உள்ளிட்டவை சம்மதம்தெரிவித்துள்ளன. 

கோவாவில் 2 துணை முதல்வர்கள் உள்ளனர். அமைச்சரவையில் மொத்தம் 12 உறுப்பினர்களே இருக்கின்றனர். எம்.ஜி.பி. கட்சியின் சுதின் தவாலிகரும், கோவா முன்னணியின் விஜய் சர்தேசியும் கோவாவில் துணை முதல் மந்திரிகளாக இருக்கின்றனர். 

அவர்கள் இருவரும்தான் தங்களுக்கு முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். நேற்று மாலை கோவா வந்த மத்திய மந்திரி நிதின் கட்காரி இன்று காலை 5.30 மணி வரையில் கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் பிரமோத் சாவந்தை முதல்வராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 

40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் பாஜகவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். கோவா முன்னணியில் 3 பேர், எம்.ஜி.பி. கட்சியில் 3 பேர், சுயேச்சைகள் 3 பேர் என கூடுதலாக 9 பேருடன் 21 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்து வருகிறது. 

காங்கிரசுக்கு 15 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மீதமுள்ள 4 இடங்கள் 2 உறுப்பினகள் மறைவாலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் ராஜினாமா செய்ததாலும் காலியாக உள்ளன. 

கோவா அரசியலில் அதிரடி திருப்பமாக  புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரமோத சாவந்த் இன்று இரவுக்குள் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story