கோவாவின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார் "பிரமோத் சாவந்த்"


கோவாவின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார் பிரமோத் சாவந்த்
x
தினத்தந்தி 18 March 2019 8:37 PM GMT (Updated: 18 March 2019 8:44 PM GMT)

கோவா மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். #PramodSawant #Goa

பனாஜி,

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்ததை தொடர்ந்து தற்போது சபாநாயகராக உள்ள பிரமோத் சாவந்த் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

கோவாவில் முதல்-மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன் தினம் காலமானார். நேற்று மாலை 5 மணியவில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பாரிக்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக சட்டமன்றத்தில் தாங்களே தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் காங்கிரசை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கோரிக்கைவிடுத்தனர். இதனால் கோவா அரசியலில் 2 நாட்களாக குழப்பம் நிலவியது.

மனோகர் பாரிக்கர் மறைவால் அடுத்த முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தின. இதற்காக மத்திய மந்திரியும், பா.ஜனதா மாநில பொறுப்பாளருமான நிதின்கட்காரி, பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்.ஜி.பி.), கோவா பார்வர்டு கட்சி (ஜி.எப்.பி.) எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

மனோகர் பாரிக்கர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக பா.ஜனதா தலைவர் அமித்ஷா பனாஜி வந்தார். பாரிக்கரின் இறுதி சடங்குகள் முடிந்ததும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அமித்ஷா தலைமயில் நடைபெற்றது. 

இந்நிலையில் கோவா சபாநாயகராக இருந்த  பிரமோத் சாவந்த்தை முதல்-மந்திரியாக நியமிக்க பா. ஜனதா தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கு கூட்டணி கட்சிகளான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி உள்ளிட்டவை சம்மதம் தெரிவித்தன.  

40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் பா.ஜனதாவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். கோவா பார்வர்டு கட்சியில் 3 பேர், எம்.ஜி.பி. கட்சியில் 3 பேர், சுயேச்சைகள் 3 பேர் என கூடுதலாக 9 பேருடன் 21 உறுப்பினர்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது. 

கோவா சட்டசபையில் காங்கிரசுக்கு 15 உறுப்பினர்கள் உள்ளனர். எஞ்சிய 4 இடங்கள் 2 உறுப்பினர்கள் மறைவால் காலியாக இருக்கின்றன. அதேபோல, காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர் கடந்த வருடம் ராஜினாமா செய்ததாலும் காலியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜ்பவனில் கவர்னர் மிருதுளா சின்ஹா, கோவா மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்திற்கு இன்று அதிகாலை 2 மணி அளவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 45 வயதாகும் பிரமோத் சாவந்த் 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றுள்ளார். 

முன்னதாக பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம், “கட்சி எனக்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்துள்ளது, சிறந்த முறையில் அதை செயல்படுத்த நான் முயற்சி செய்வேன். மனோகர் பாரிக்கர் என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர், நான் சபாநாயகராகவும், இன்று முதல்வராகவும் ஆனதற்கு அவரே காரணம்” என்று கூறினார்.

Next Story