தேர்தல் முடிந்த பின் நிரவ் மோடியை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவர்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேர்தலுக்காக இந்தியாவுக்கு கொண்டு வரும் நிரவ் மோடியை தேர்தலுக்கு பின் வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவர் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
புதுடெல்லி,
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார்.
இதுபற்றிய விசாரணை தொடங்குவதற்கு முன்பே நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது இருப்பிடம் தெரியாத நிலையில், நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்தனர். இதன்பின் அவர் இங்கிலாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்திருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய கடந்த 18ந்தேதி வாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில், லண்டனில் உள்ள ஹோல்பார்ன் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார். இதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத் கூறும்பொழுது, பா.ஜ.க.வினரே நிரவ் மோடி வெளிநாடு தப்பி செல்ல உதவினர். அவர்கள் தற்பொழுது அவரை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வருகின்றனர்.
தேர்தலுக்காக அவர்கள் நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர். தேர்தல் முடிந்தபின் அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவர் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story