கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தது: கேரளாவில் 14 தொகுதிகளில் பா.ஜனதா போட்டி


கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தது: கேரளாவில் 14 தொகுதிகளில் பா.ஜனதா போட்டி
x
தினத்தந்தி 21 March 2019 5:00 AM IST (Updated: 21 March 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ள நிலையில் மாநிலத்தில் 14 தொகுதிகளில் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்து உள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வருகிறது. இதில் கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா, கேரள காங்கிரஸ் ஆகிய சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் அந்த கட்சி ஈடுபட்டு இருந்தது.

இந்த பேச்சுவார்த்தை நேற்று இறுதி செய்யப்பட்டது. அதன்படி மொத்தமுள்ள 20 தொகுதிகளில் பா.ஜனதா 14 இடங்களில் போட்டியிடுகிறது. பாரத் தர்ம ஜனசேனா கட்சி 5 இடங்களிலும், கேரள காங்கிரஸ் ஓரிடத்திலும் போட்டியிடுவதாக பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறினார்.

கேரளாவில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து, பா.ஜனதாவின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இதில் முன்னாள் மிசோரம் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் திருவனந்தபுரம் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

அங்குள்ள வட்டக்கரா மற்றும் வயநாடு தொகுதிகளை தவிர மீதமுள்ள தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. மாநிலத்தின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 23–ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கிடையே கேரளாவின் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் தற்போதைய எம்.எல்.ஏ.க்களை கட்சிகள் களமிறக்கி இருக்கின்றன. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 6 எம்.எல்.எ.க்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 3 எம்.எல்.ஏ.க்களையும் நாடாளுமன்ற வேட்பாளர்களாக அறிவித்து உள்ளன.

பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை நாடாளுமன்ற வேட்பாளர்களாக்கி இருக்கும் நடவடிக்கைக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம் மாநில மக்களை கட்சிகள் அவமதித்து விட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.


Next Story