வேட்பாளர் செலவின பட்டியல்: மட்டன் பிரியாணி விலை ரூ.200 ஆக நிர்ணயம் - தேர்தல் கமிஷன் உத்தரவு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவின பட்டியலில் மட்டன் பிரியாணியின் விலை ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றன. இதில் களம் காண வாய்ப்பு கிடைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
தேர்தலில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற முடிவோடு களத்தில் இறங்கி இருக்கும் அவர்கள், வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு வகையில் பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இதற்காக சிலப் பல கோடிகளை வாரியிறைக்கவும் சிலர் தயங்குவது இல்லை.
ஆனால் அப்படிப்பட்ட வேட்பாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தேர்தல் கமிஷன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது வேட்பாளர் தங்கள் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அதிகப்பட்ச விலை விவரங்களை தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. இது தொடர்பான பட்டியல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, வேட்பாளர்கள் பயன்படுத்தும் 2 படுக்கை வசதி கொண்ட அறையின் வாடகை 5 நட்சத்திர விடுதி என்றால் ரூ.9300 மற்றும் வரிகளும் அடங்கியதாக இருக்க வேண்டும். 3 நட்சத்திர விடுதி என்றால் ரூ.5,800 மற்றும் வரிகள் அடங்கி இருக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
இதைப்போல மட்டன், சிக்கன், காய்கறி பிரியாணிகளின் விலை முறையே ரூ.200, ரூ.180, ரூ.100 ஆக இருக்க வேண்டும் எனக்கூறி உள்ள தேர்தல் கமிஷன், மற்ற உணவு வகைகளான சாப்பாடு ரூ.100, சிற்றுண்டி ரூ.100, தேநீர் ரூ.10, பால் ரூ.15, காய்கறி சாதம் ரூ.50, இளநீர் ரூ.40 என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும் அறிவித்து இருக்கிறது.
மேலும் பூசணிக்காய் ரூ.120, சேலை (பூனம்) மற்றும் டீ–சர்ட் முறையே ரூ.200 மற்றும் ரூ.175, வாழை மரம் ரூ.700, தொப்பி ரூ.50, பூக்கள் ரூ.60, சால்வை ரூ.150, தண்ணீர் ஒரு லிட்டர் ரூ.20, பிளீச்சிங் பவுடர் கிலோ ரூ.90 போன்றவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வேட்பாளர்களுடன் செல்லும் தொழிலாளர்களின் ஊதியத்தை பொறுத்தவரை 8 மணி நேரத்துக்கு ரூ.450–ம், டிரைவர்களுக்கு ரூ.695–ம் வழங்கப்பட வேண்டும். பட்டாசுகளுக்கு ரூ.600 (ஆயிரம் வாலா), பேண்ட் மேளத்துக்கு ரூ.4500 (4 மணி நேரத்துக்கு) என நிர்ணயித்துள்ள தேர்தல் கமிஷன், திருமண மண்டபங்களுக்கு வாடகையாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அறிவித்து இருக்கிறது.
வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரசார கூட்டங்களில் பயன்படுத்தும் எல்.இ.டி. திரைகளின் வாடகை ரூ.12 ஆயிரமாகவும் (8 மணி நேரம்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர்களின் இத்தகைய தேர்தல் செலவினங்களை கண்காணிக்க தொகுதிக்கு 2 அதிகாரிகளை நியமித்து இருக்கும் தேர்தல் கமிஷன், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சார்பில் நடைபெறும் பிரசாரங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்யவும் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.