பிரியங்கா மாலை அணிவித்த லால்பகதூர் சாஸ்திரி சிலையை கங்கை நீரால் கழுவிய பா.ஜனதா தொண்டர்கள்
பிரியங்கா மாலை அணிவித்த லால்பகதூர் சாஸ்திரி சிலையை பா.ஜனதா தொண்டர்கள் கங்கை நீரால் கழுவியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், அந்த சிலையை பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் கங்கை நீரால் சுத்தம் செய்துள்ளனர்.
ஊழல்கறை படிந்த காங்கிரஸ் குடும்பத்தைச்சேர்ந்த பிரியங்கா காந்தி தூய்மையான இந்தியாவின் இரண்டாவது பிரதமரின் சிலைக்கு மாலை அணிவிக்க என்ன தகுதியிருக்கிறது என்று பா.ஜனதாவினர் கேள்வியை எழுப்பினர்.
இதற்கிடையே லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு பிரியங்கா காந்தி அணிவித்த மாலை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மாலை என்று கூறப்படுகிறது. பிரியங்கா தனக்கு அளிக்கப்பட்ட மாலையைத்தான் சாஸ்திரி சிலைக்கு போட்டதாகவும், இந்த அவமதிப்பை காங்கிரசார் கைதட்டி ரசித்ததாகவும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார்.
லால்பகதூர் சாஸ்திரியின் பேரனும், உத்தரபிரதேச மந்திரியுமான சித்தார்த் நாத் சிங்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரியங்காவின் செயல், தங்களுக்கு வேதனை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாருமே லால் பகதூர் சாஸ்திரியை எப்பொழுதும் மதித்ததில்லை. பிரியங்கா காந்தி நேரு குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் இந்தியாவின் இரண்டாவது பிரதமரை அவமதித்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே இதுதொடர்பாக அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது என காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story