உளவு பிரிவின் தவறான தகவலால் ஆசிரியர் படுகொலை; மன்னிப்பு கோரிய மாவோயிஸ்டு


உளவு பிரிவின் தவறான தகவலால் ஆசிரியர் படுகொலை; மன்னிப்பு கோரிய மாவோயிஸ்டு
x
தினத்தந்தி 21 March 2019 3:50 PM GMT (Updated: 21 March 2019 3:50 PM GMT)

உளவு பிரிவின் தவறான தகவலால் ஆசிரியர் படுகொலை நடந்து விட்டது என கூறி மாவோயிஸ்டு மன்னிப்பு கேட்டுள்ளது.

மும்பை,

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  இங்கு மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.  கடந்த 8ந்தேதி கட்சிரோலி மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நக்சலைட்டு ஒழிப்பு பேரணி ஒன்றை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 12ந்தேதி கொர்ச்சி பகுதியில் நகராட்சி பள்ளியில் பணியாற்றிய யோகேந்திர மேஷ்ராம் என்ற ஆசிரியரை கோம்பிடா பஜார் பகுதியில் வைத்து மாவோயிஸ்டுகள் கொன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்டு) அமைப்பின் தளபதி பவான் என்பவர் மேஷ்ராம் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் உளவு பிரிவின் தவறான தகவலால் ஆசிரியர் படுகொலை நடந்து விட்டது.  அவரை போலீசார் என தவறாக சந்தேகித்து விட்டோம்.  இதனால் அவர் கொல்லப்பட்டு விட்டார்.  ஆனால் அவர் ஒன்றுமறியாதவர் என கூறி மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கூறிய போலீஸ் சூப்பிரெண்டு சைலேஷ் பல்காவாடே, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போலீசாரின் கை ஓங்கி உள்ளது.  அவர்கள் நெருக்கடியில் உள்ளனர்.  அதனால் இதுபோன்று ஒன்றுமறியாத நபர்களை கொன்று வருகின்றனர் என கூறியுள்ளார்.

Next Story