நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மேக்தா ரூ.1,201 கோடியை மாற்ற உதவியுள்ளார் - அமலாக்கப்பிரிவு


நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மேக்தா ரூ.1,201 கோடியை மாற்ற உதவியுள்ளார் - அமலாக்கப்பிரிவு
x
தினத்தந்தி 22 March 2019 3:27 PM IST (Updated: 22 March 2019 3:27 PM IST)
t-max-icont-min-icon

நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மேக்தா தன்னுடைய ‘ஷெல்’ நிறுவனங்களை பயன்படுத்தி 1,201 கோடி ரூபாயை மாற்றியுள்ளார் என அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.


குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்திடாமல் மோசடி செய்துவிட்டு லண்டன் சென்றுவிட்டார். அவரை இந்தியா அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மோசடி வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது. மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மார்ச் 8-ம் தேதி அமலாக்கப்பிரிவு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.


நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மேக்தா தன்னுடைய ‘ஷெல்’ நிறுவனங்களை பயன்படுத்தி 1,201 கோடி ரூபாயை மாற்றியுள்ளார். துபாய் மற்றும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்களில் இயக்குனராக இருந்த பூர்வி, நிரவ் மோடியால் வழங்கப்பட்ட உறுதியளிப்பு கடிதத்தை (Letter of Undertaking) கொண்டு பணம் பெற்றுள்ளார். 

உறுதியளிப்பு கடிதத்தை ஆதாரமாக வைத்து ஹாங்காங்கில் உள்ள அலாகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கிளைகள் கடன் வழங்கியுள்ளன. எல்ஓயு எனப்படும் உறுதியளிப்பு கடிதம் இருந்தால் ஒருவேளை கடன் பெறுவோர் தொகையை திரும்ப அளிக்கத் தவறினால் கடன் மற்றும் அதற்குரிய வட்டியை பஞ்சாப் நேஷனல் வங்கி அளிக்கும் என்ற உத்திரவாதத்தை இந்த உறுதியளிப்பு கடிதம் அளிக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் இதனை ஊழியர்களும் தவறாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால் தனக்கு எதிரான குற்றச்சாட்டை பூர்வி மேக்தா மறுத்துள்ளார். 

Next Story