அரியானாவில் 47 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 60 அடி போர்வெல்லிலிருந்து குழந்தை மீட்பு


அரியானாவில் 47 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 60 அடி போர்வெல்லிலிருந்து குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 22 March 2019 2:16 PM GMT (Updated: 22 March 2019 2:16 PM GMT)

அரியானாவில் 47 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 60 அடி போர்வெல்லிலிருந்து 18 மாத குழந்தை மீட்கப்பட்டது.

அரியானா மாநிலம் ஹிஸ்தாரில் புதன்கிழமை வீட்டுக்கு வெளியே விளையாடிய 18 மாத குழந்தை நதீம் கான் 60 அடி ஆழ போர்வெல்லில் விழுந்துவிட்டான். உடனடியாக தகவல் அறிந்து இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள் போர்வெல்லிற்குள் செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிறுவன் உள்ளே இருக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. உடனடியாக சிறுவனுக்கு சுவாச பிரச்சனைகள் எதுவும் ஏற்படக்கூடது என்பதற்காக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது.

போர்வெல்லிற்கு அருகே மீட்பு குழுவினர் சுமார் 70 அடிக்கு பள்ளம் தோண்டினர். பின்னர் சிறுவன் இருந்த இடத்தை அடைந்து, மீட்டனர். சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிறுவன் நல்ல உடல் நலத்துடன் உள்ளான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை மாலை 5 மணியில் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் இன்று மீட்கப்பட்டான். சுமார் 47 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் போர்வெல் உரிமையாளர் மீது எந்தஒரு கருணையுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

Next Story