ஓரங்கட்டப்படும் பாரதீய ஜனதா தலைவர்கள்


ஓரங்கட்டப்படும் பாரதீய ஜனதா தலைவர்கள்
x
தினத்தந்தி 23 March 2019 5:00 AM IST (Updated: 23 March 2019 10:13 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று வரும், நாளை வரும் என எதிர்பார்க்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளிவந்திருக்கிறது. அதில் 184 பேரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அத்வானி

கடந்த முறை பாரதீய ஜனதா அரசில் மூத்த தலைவர் அத்வானிக்கு இடம் கிடைக்கவில்லை. 75 வயதைக் கடந்தவர்களுக்கு மந்திரிசபையில் வாய்ப்பு அளிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக அப்போது சொல்லப்பட்டது.

சரி, உச்ச பதவியான ஜனாதிபதி பதவியில் அமர அத்வானிக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் ராம்நாத் கோவிந்துக்கு யோகம் அடித்தது. அத்வானிக்கு அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது.

இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிற வாய்ப்பும், அத்வானிக்கு வழங்கப்படவில்லை. மறுக்கப்பட்டு விட்டது. அதற்கான காரணமும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அத்வானியின் வயது 91 என்பதால்தான் வாய்ப்பு தரப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

அவர் 6 முறை வென்ற குஜராத்தின் காந்திநகர் தொகுதி, பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்த அமித்ஷாதான் கடந்த காலங்களில் அத்வானிக்கு காந்திநகரில் தேர்தல் பொறுப்புகளை கவனித்தவர். இப்போது அவருக்கே அந்த தொகுதி கிடைத்திருக் கிறது. இதன்மூலம் அத்வானியின் இடத்துக்கு அமித்ஷா உயர்த்தப்பட்டிருக்கிறார்.

முரளி மனோகர் ஜோஷி

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவி வகித்த மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, கடந்த முறை தனது வாரணாசி தொகுதியை மோடிக்காக விட்டுக்கொடுத்து விட்டு கான்பூர் தொகுதியில் களம் கண்டு வென்றார். இந்த முறை அவருக்கும் வாய்ப்பு கிடையாது. அவருக்கு வயது 85. கான்பூரில் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை என்பது வேறுகதை.

முன்னாள் மத்திய மந்திரி பி.சி. கந்தூரி, உத்தரகாண்ட் மாநிலம், கார்வால் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்த தொகுதிக்கு டிஎஸ். ராவத் நிறுத்தப்பட்டு விட்டார். எனவே பி.சி. கந்தூரிக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

உமாபாரதி

பாரதீய ஜனதாவின் சர்ச்சைக்குரிய பெண் தலைவரும், மத்திய மந்திரியுமான உமாபாரதி, உத்தரபிரதேசத்தின் ஜான்சி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டார். அவருக்கு வயது 59.

இதே போன்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூத்த தலைவர் கல்ராஜ் மிஷ்ராவும் (உ.பி.யின் தியோரியா தொகுதி) போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். அவருக்கு வயது 77.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த மத்திய பெண் மந்திரி கிருஷ்ணா ராஜூக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவரது ஷாஜகான்பூர் தொகுதியில் அருண்சாகர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணாராஜூக்கு வயது 52 தான்.

மேனகா?

மற்றொரு மத்திய பெண் மந்திரியான மேனகா காந்தியின் பிலிப்பிட், அவரது மகன் வருண் காந்தியின் சுல்தான்பூர் தொகுதிகளுக்கு முதல் பட்டியலில் இடம் இல்லை. இது ஆச்சரியத்தை அளிக்கிறது. இவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாக நிற்கிறது.

போட்டியிடவில்லை என்று அறிவித்து இருக்கும் தலைவர்களும் இடம் மறுக்கப்படும் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டார்களோ என்ற கேள்வியை திருவாளர் பொதுமக்கள் எழுப்புவதும் கவனிக்கத்தகுந்தது.


Next Story