‘தாமரை’க்கு ‘கை’ கொடுக்குமா கேரளா?


‘தாமரை’க்கு ‘கை’ கொடுக்குமா கேரளா?
x
தினத்தந்தி 23 March 2019 1:08 PM IST (Updated: 23 March 2019 1:27 PM IST)
t-max-icont-min-icon

இந்திய அரசியல் வரைபடத்தில் கேரள மாநிலத்துக்கு என்று ஒரு தனிச்சிறப்பான இடம் உண்டு.

கேரள மாநிலத்தில் கடந்த 30, 35 ஆண்டுகளாக ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை மக்கள் நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கூட்டணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியும் மாறி மாறி அங்கு ஆட்சிக்கு வருகின்றன. ஆக தேர்தல்தோறும் ஆட்சி மாற்றம் என்பது கேரளாவின் எழுதப்படாத சட்டம்,

நாடாளுமன்ற தேர்தலில் கேரள மக்கள் எழுதுகிற தீர்ப்பு எப்படி இருக்கிறது?

கேரளாவில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 20. கடந்த 4 நாடாளுமன்ற தேர்தலை ஆராய்கிறபோது, அங்கு 1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் தலா 8 இடங்கள் கிடைத்தன. எஞ்சிய 4 இடங்களை மற்ற கட்சிகள் பகிர்ந்து கொண்டன.

2004-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 18 இடங்களில் அந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்துடன் திருப்தி அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த தேர்தலில்தான் முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஒரே ஒரு இடத்தைப் பிடித்தது.

2 தேர்தல்களாக காங்கிரஸ் அலை

2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு 16 இடங்களும், இடதுசாரிகளுக்கு 4 இடங்களும் கிடைத்தன. 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைத்தன. இடதுசாரிகளுக்கு 8 இடங்கள் கிடைத்தன.

தொடர்ந்து 2 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இது காங்கிரசுக்கு சாதகமான அலையாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது.

ஆனாலும், இந்த தேர்தலில் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதே கேள்வியாக எதிரொலிக்கிறது.

ஆளும் இடதுசாரி கூட்டணி, கடந்த 2 முறை கோட்டை விட்டு விட்டோம், இந்த முறை விட்டதைப் பிடித்து விட வேண்டும், 2004-ல் கிடைத்த வெற்றியை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்று கருதுகிறது.

தலைகள் இல்லா தேர்தல்

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் தென் மாநிலங்களில் கேரளாதான் கை கொடுத்து வருகிறது. அதைத் தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் அந்தக் கட்சியின் மூத்த தலைகளே இந்த முறை அங்கு களம் இறங்கவில்லை. குறிப்பாக கே.சி.வேணுகோபால், உம்மன் சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மற்றொரு மூத்த தலைவரான ஏ.கே. அந்தோணி, தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் நிற்கப்போவது இல்லை.

அறிமுகமான நபராக முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர்தான் தென்படுகிறார். அவரை எதிர்த்து இந்த முறை பாரதீய ஜனதா கட்சி வலுவான வேட்பாளரை களம் இறக்கி உள்ளது. மிசோரம் மாநிலத்தின் கவர்னராக இருந்து வந்த கும்மணம் ராஜசேகரன், அந்தப் பதவியை துறந்து விட்டு நாடாளுமன்ற தேர்தலில் சசி தரூருக்கு எதிராக களம் இறங்கி உள்ளார்.

பிரசாரத்தை பொறுத்தமட்டில் இடதுசாரி கூட்டணி களத்தில் முதலில் இறங்கி விட்டது.

கேரளாவில் இதுவரை காங்கிரஸ் கூட்டணியா அல்லது இடதுசாரி கூட்டணியா என்ற கேள்விதான் எழும். ஆனால் இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி “நானும் களத்தில் இருக்கிறேன்” என இறங்கி முக்கிய போட்டியை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை விவகாரம்

கேரளாவில் ஆளும் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருப்பது சபரிமலை விவகாரம்தான்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை பெண் அமைப்புகள் வரவேற்றாலும், இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. “பிரம்மச்சாரியான அய்யப்பனை மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் தரிசிக்க ஆகம விதிகளை மீறி எப்படி அனுமதிக்க முடியும்?” என அவர்கள் கேட்டு, பெண்களை அனுமதிக்க மறுத்து தொடர் போராட்டங்களில் குதித்தபோது, அந்த போராட்டங்களை அடக்கியதும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு நடந்து கொண்ட விதமும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை அவர்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு, தற்போதைய இடதுசாரி ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு சாதகமாக அமையும் என அந்த கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் காங்கிரசுக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

ஆனால் மத்தியில் ஆளும் கட்சியாக இருந்துகொண்டே, கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் மக்களின் உணர்வோடு இணைந்து இருந்தோம் என்பதை வைத்துத்தான் பாரதீய ஜனதா கட்சி காய்களை நகர்த்துகிறது.

கால்பதிக்குமா பா.ஜனதா?

இதுவரை கேரளாவில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஒருவர் கூட நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. 2004-ம் ஆண்டு பாரதீய ஜனதா கூட்டணி கட்சியாக இருந்த இந்திய பெடரல் ஜனநாயக கட்சிக்கு ஒரு இடம் கிடைத்ததே தவிர பாரதீய ஜனதாவுக்கு கிடைத்தது இல்லை.

இந்த முறை அந்த குறையை நீக்கி கால் பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாரதீய ஜனதா கட்சி களம் இறங்கி இருக்கிறது. அந்தக் கட்சியின் தாமரைக்கு கேரள மக்கள் கை கொடுப்பார்களா? இங்கு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.

அடுத்த மாதம் 23-ந் தேதி தேர்தல். சரியாக அதற்கு அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை. அன்று தெரியும், கேரள மக்களின் தீர்ப்பு.

Next Story