மேற்கு வங்காளத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கே ‘சீட்’ : கட்சிகளுக்குள் கொந்தளிப்பு
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள், தங்கள் கட்சிகளில் புதிதாக இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து இருப்பது அந்ததந்த கட்சிகளுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொல்கத்தா,
நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பலமுனை போட்டி ஏற்பட்டு உள்ளது. அங்கு மகத்தான வெற்றி பெறுவதற்காக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையான மேற்கு வங்காளத்தில் தங்கள் கொடியை பறக்கவிட பா.ஜனதாவும் தீவிரம் காட்டி வருகிறது.
எனவே தேர்தல் நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் மிகுந்த கவனமாக ஈடுபட்டு உள்ளன. இதில் வேட்பாளர் தேர்வில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா போன்ற கட்சிகள் புதிய அணுகுமுறை ஒன்றை பின்பற்றியுள்ளன. அதாவது பிற கட்சிகளில் இருந்து விலகி தங்கள் கட்சிகளில் சேர்ந்தவர்களுக்கு அவை வாய்ப்பு வழங்கி இருக்கின்றன.
மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. இதில் புதுமுகங்களான 18 பேரில் 7 பேர் பிற கட்சிகளில் இருந்து திரிணாமுல் காங்கிரசுக்கு தாவியவர்கள். குறிப்பாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளிடம் இருந்து கடந்த சில ஆண்டுகளில் திரிணாமுல் காங்கிரசுக்கு வந்தவர்கள் ஆவர்.
இது அந்த கட்சியினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வந்த பழையவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்து இருப்பது அடிமட்ட தொண்டர்களிடையே கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக தெற்கு தினாஜ்பூர் மாவட்ட தலைவர் பிப்லாப் மித்ரா கூறினார்.
இதைப்போல பா.ஜனதாவும் பிற கட்சிகளில் இருந்து வந்த சிலருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அந்த கட்சி அறிவித்து இருந்தது. அதில் 6 பேர் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
மேற்கு வங்க பா.ஜனதாவில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்கு தகுதியான வலிமையான வேட்பாளர் இல்லாததால்தான் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதை மாநில பா.ஜனதா தலைவரான திலிப் கோஷூம் சமீபத்தில் கூறியிருந்தார்.
பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்கி இருப்பது, பா.ஜனதாவிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய வேட்பாளர் தேர்வை கண்டித்து துணைத்தலைவர் ராஜ்கமல் பதக் உள்பட பல தலைவர்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கி வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
எனினும் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக இரு கட்சிகளும் விளக்கம் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.