கர்நாடகாவில் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
கர்நாடகாவில் கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட தனியார் வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டுமான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்துள்ளது. இதனால் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வந்துள்ளன.
திடீரென்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், கடைகளில் பணியாற்றியவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
சம்பவம் நடந்த முதல் நாளில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 60-க்கும் மேற்பட்டோர்களை தீயணைப்பு படையினர், போலீசார், பொதுமக்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர். முதல் நாளில் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
அதோடு இரவு பகலாக மீட்பு பணிகள் நீடித்து வருகின்றன. 2வது நாள் மீட்பு பணியின்போது 5 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. 3வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. இதில், மேலும் 6 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து கட்டிடம் இடிந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. 4வது நாளாக ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்று 16 ஆக உயர்ந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. பலர் காயமடைந்து சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Related Tags :
Next Story