மத்தியில் ஆட்சியமைப்பதில் பிஜு ஜனதா தளம் முக்கிய இடம் வகிக்கும் - நவீன் பட்நாயக்


மத்தியில் ஆட்சியமைப்பதில் பிஜு ஜனதா தளம் முக்கிய இடம் வகிக்கும் - நவீன் பட்நாயக்
x
தினத்தந்தி 24 March 2019 1:38 PM GMT (Updated: 24 March 2019 1:38 PM GMT)

மத்தியில் ஆட்சியமைப்பதில் பிஜு ஜனதா தளம் முக்கிய இடம் வகிக்கும் என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.



ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. 2000-ம் ஆண்டு முதல்வராக வந்த பட்நாயக் அசைக்கமுடியாத சக்தியாக ஒடிசாவில் ஆட்சி செய்து வருகிறார்.  2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலையையும் வீழ்த்தி பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் மண்ணை கவ்வியது. பா.ஜனதா ஒரு தொகுதியில் வெற்றியை தனதாக்கியது. மாநிலத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி கணிசமாக உயர்ந்து உள்ளது.

இந்த முறையும் பிஜு ஜனதா தளமே வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு வேட்பாளர் ஒதுக்கீட்டிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் பிரசாரத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா மாநில முதல்–மந்திரியுமான நவீன் பட்நாயக் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஒடிசாவில் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் நிச்சயம் வெற்றி பெற்று, மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றார்.

மேலும், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்த பா.ஜனதா, அதிகாரத்துக்கு வந்ததும் அதை புறக்கணித்து விட்டதாக நவீன் பட்நாயக் குற்றம் சாட்டினார்.

Next Story