தேசிய செய்திகள்

கேரளாவில் ராகுல் காந்தி போட்டியா? பின்னணி என்ன? + "||" + In Kerala Rahul Gandhi contest What the background

கேரளாவில் ராகுல் காந்தி போட்டியா? பின்னணி என்ன?

கேரளாவில் ராகுல் காந்தி போட்டியா? பின்னணி என்ன?
அவர் உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்டு 2004, 2009, 2014 என கடந்த 3 நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிக்கனி பறித்து சுவைத்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதியின் நாயகன்.

இந்த தேர்தலிலும் அவர் அங்கே வழக்கம் போல களம் இறங்கி இருக்கிறார். கூடவே தங்கை பிரியங்கா பக்க பலமாக நின்று கொண்டிருக்கிறார்.
இந்த தொகுதி ராகுல் காந்தியின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது.

கடந்த 1980-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் ஏழாவது நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் சித்தப்பா சஞ்சய் காந்தி வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். அவர் விமான விபத்தில் இறந்து விடவே, அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

அந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தொடர்ந்து 8, 9, 10-வது நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று அந்த தொகுதியை தக்க வைத்திருந்தார்.

பா

1991-ம் ஆண்டு அவர் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் பலி ஆனார். அதைத் தொடர்ந்து அமேதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சதீஷ் சர்மா போட்டியிட்டு வென்றார். 1996-ல் நடந்த 11-வது நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.

1998-ல் நடந்த 12-வது நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் டாக்டர் சஞ்சய்சிங் வெற்றி பெற்றார். சதீஷ் சர்மா தோற்றுப்போனார்.

ஆனால் 1999-ல் நடந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி முதன்முதலாக அங்கு கால் பதித்து வெற்றி பெற்றார். ஆனால் அடுத்து 2004-ல் நடந்த 14-வது நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி, தனது மாமியார் இந்திரா காந்தியின் ரேபரேலி தொகுதிக்கு மாறி, அமேதியை மகன் ராகுலுக்கு விட்டுத்தந்தார்.

அதில் இருந்து 2004, 2009, 2014 என தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ அடித்தார்.

நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி அமேதி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளபோதும், அவர் கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை, அங்கு காங்கிரஸ் கட்சியில் வலுப்பெற்றுள்ளது.

இதற்கு காரணம் அமேதி தொகுதியில் மீண்டும் பாரதீய ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி களம் இறக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான். வலுவான போட்டியை ராகுல் காந்தி எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. எனவே அவர் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வந்துள்ள நிலையில, அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடுவது பாதுகாப்பாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

ஏனென்றால் அமேதியில் 2004 தேர்தலில் ராகுல் காந்திக்கு 66.18 சதவீத ஓட்டு கிடைத்தது; 2009 தேர்தலில் அதை விட அதிகமாக 71.78 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் 2014 தேர்தல், ராகுல் காந்திக்கு சோதனையாக அமைந்தது.

அந்த தேர்தலில் ராகுலுக்கு கிடைத்த ஓட்டு 36.71 சதவீதம்தான். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானிக்கு 34.38 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அப்போது நடிகை என்ற அந்தஸ்துதான் ஸ்மிருதி இரானிக்கு இருந்தது. இப்போது அவர் மத்திய மந்திரி என்கிறபோது அவரது செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில், அமேதியில் ராகுல் காந்தியின் வெற்றி எளிதாக இருக்காது. மிகக் கடுமையான போட்டியை அவர் எதிர்கொண்டாக வேண்டும்.

இந்த நிலையில்தான் அவர் காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக உள்ள கேரளாவில், வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அந்த மாநில காங்கிரசார் விரும்புகிறார்கள். இதை அவரும் பரிசீலிக்காமல் இல்லை.

இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்திக் என்பவர் களம் இறங்க இருந்தார். ராகுல் காந்தி போட்டியிடப்போகிறார் என்ற தகவல் வெளியானதும் அவர் விலகிக்கொண்டு வழி விட்டிருக்கிறார்.

புதிதாக உருவான வயநாடு தொகுதியைப் பொறுத்தமட்டில் 2009, 2014 தேர்தல்களில் தொடர்ந்து இரு முறை காங்கிரஸ் வேட்பாளர் ஷா நவாஸ் வெற்றி பெற்றிருக்கிறார். சமீபத்தில் ஷா நவாஸ் மரணம் அடைந்து விட்டபோதும், இந்த முறையும் இங்கு காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் ராகுல் காந்தி களம் இறங்கினால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

இப்படி ராகுல், வயநாடு தொகுதியில் களம் இறங்கினால், அது தென் மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள சாதகமாக இருக்கும் என்று காங்கிரசார் கருதுகின்றனர்.

இந்த தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரத் தர்ம ஜனசேனா போட்டியிட இருக்கிறது. ஒரு வேளை ராகுல் காந்தி களம் இறங்கினால், அந்த தொகுதியை பாரதீய ஜனதா கட்சி எடுத்துக்கொண்டு, அந்தக் கட்சிக்கு வேறுதொகுதியை தர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

ராகுல் காந்தியை எதிர்த்து தேசிய அளவில் பிரபலமான ஒருவரை களம் இறக்க வேண்டும் என்று வயநாடு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி, கட்சியின் மாநில தலைமையை வலியுறுத்தி உள்ளது.

ஆனால் இந்த தொகுதியை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்று பாரத் தர்மஜனசேனாவின் மூத்த தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி கருத்து தெரிவித்திருக்கிறார். பாரதீய ஜனதா கட்சி, வயநாடு தொகுதியை எங்களிடம் இருந்து கோராது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி இதுவரை வயநாடு தொகுதியில் போட்டியிட எந்த முடிவும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ சொல்கிறார்.

இன்று இதில் ராகுல் காந்தி இறுதி முடிவு எடுத்து விடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

முதல்-மந்திரி பினராயி விஜயன், “ ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட்டால், அது காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து களம் இறங்குகிற சூழலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் அது தவறான சமிக்ஞையாகி விடும்” என்கிறார்.

ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலாவோ, “ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் எங்கே 20 தொகுதிகளிலும் தோற்றுவிடுவோ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பயப்படுகிறது” என்கிறார்.

ராகுல் வயநாட்டில் களம் இறங்குவாரா, மாட்டாரா, என்ன முடிவு எடுக்கப்போகிறார்? கேரளா மட்டுமல்ல, நாடே ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம், வயநாட்டில் அமைக்க வேண்டும் -ராகுல் காந்தி
வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை வயநாட்டில் அமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2. கேரளாவுக்கு உதவுவதாக மோடி தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி
கேரளாவுக்கு உதவுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு - புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகிய நிலையில், இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
4. “காஷ்மீரை பிரிப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை காக்க முடியாது” - ராகுல் காந்தி கருத்து
காஷ்மீரை இரண்டாக பிரிப்பதன் மூலம், தேசிய ஒருமைப்பாட்டை காக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறினார்.
5. குழப்பமான சூழ்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி 10-ந் தேதி கூடுகிறது - புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
குழப்பமான சூழ்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி 10-ந் தேதி கூடுகிறது. இதில் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.