டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்


டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 26 March 2019 6:39 AM GMT (Updated: 26 March 2019 7:30 PM GMT)

தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் அ.இ.அ.தி.மு.க. பெயரை அனுமதித்து தேர்தல் கமிஷன் 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், இந்த வழக்கு முடிவடையும் வரை இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்தாமல் முடக்கி வைக்க வேண்டும், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் எங்கள் அணியினருக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை மார்ச் 15-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. அன்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துடன் டி.டி.வி.தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் திங்கட்கிழமை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தலைமை தேர்தல் கமிஷன் தரப்பில் குக்கர் சின்னத்தை சுயேச்சை சின்னமாக தனி வேட்பாளருக்குத்தான் ஒதுக்க முடியுமே தவிர பொதுச்சின்னமாக அங்கீகாரம் பெறாத அணிக்கு வழங்க முடியாது என்று தெரிவித்தது. மேலும் தினகரன் அணி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவில்லை. அங்கீகாரமும் பெறவில்லை. எனவே, பொதுச்சின்னம் எதையும் தனியாக தினகரன் அணிக்கு வழங்க முடியாது என்று தெரிவித்தது.

இதனை திங்கட்கிழமை மாலைக்குள் பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து இது தொடர்பாக பதில் மனுவை தேர்தல் கமிஷன் தாக்கல் செய்தது.

இதனை தொடர்ந்து நேற்று மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தினகரன் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனுசிங்வி, வக்கீல் ராஜா செந்தூர் பாண்டி ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும், டி.டி.வி.தினகரன் தரப்பினரிடம், பதிவு பெறாத அணியான உங்களுக்கு பொதுச்சின்னத்தை எப்படி வழங்க முடியும் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த வக்கீல் கபில் சிபல், அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. எங்களுக்கு கட்சியை பதிவு செய்வதற்கு அவகாசம் இல்லை. அதனால் இடைக்கால கோரிக்கையாக பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை நாங்கள் கோருகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த பதிலை தலைமை நீதிபதி ஏற்க மறுத்தார். அப்போது தினகரன் தரப்பின் மற்றொரு வக்கீலான அபிஷேக் மனுசிங்வி குறுக்கிட்டு, கட்சியை பதிவு செய்வதற்காக தேர்தல் கமிஷனில் விண்ணப்பிக்க எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை இருந்தது. நாங்கள் கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் கோரி தேர்தல் கமிஷனிலும் ஐகோர்ட்டிலும் வழக்கு தொடுத்து இருந்தோம்.

இந்நிலையில் நாங்கள் கட்சியை தனியாக பதிவு செய்ய முயற்சி செய்திருந்தால் எங்கள் கோரிக்கை வலுவிழந்துவிடும் என்றார்.

டெல்லி ஐகோர்ட்டு உங்கள் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்திருக்கிறது. டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு நாங்கள் மார்ச் 15-ந் தேதி தடை விதித்த அன்றே நீங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய நிறைய நேரம் இருந்திருக்கிறது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதற்கு கபில் சிபல், நாங்கள் இன்றே பதிவு செய்ய விண்ணப்பிக்கிறோம் என்றார். அதற்கு தலைமை நீதிபதி, நீங்கள் வாய்ப்பை நழுவ விட்டு இருக்கிறீர்கள் என்றார்.

இதனை தொடர்ந்து அபிஷேக் மனுசிங்வி, கட்சியை பதிவு செய்வதற்கு நாங்கள் விண்ணப்பித்து இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இப்போது எங்கள் அணி சார்பில் 59 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த 59 வேட்பாளர்களும் ஆளுக்கு ஒன்றாக தனித்தனியாக சின்னம் வழங்கப்பட்டால் அது பாரபட்சமாக முடியும் என்றார்.

ஆனால் பதிவு பெறாத அணிக்கு பொதுச்சின்னம் வழங்க முடியாது என்றும், தனித்தனியாக ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அதிகாரியால் சுயேச்சை சின்னம் வழங்கப்படும் என்றும் தேர்தல் கமிஷன் வக்கீல் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல்களும் தனிசின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கீழ்கண்ட உத்தரவை பிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. கட்சியின் ஒரு அணிக்கு தலைமை தாங்குவதாக கூறும் மனுதாரர், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக நடத்திய நீண்ட சட்டப்போராட்டத்தில், அவருடைய கோரிக்கையை தலைமை தேர்தல் கமிஷன், டெல்லி ஐகோர்ட்டு ஆகியவை நிராகரித்துள்ளன. இது தொடர்பாக ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் கடந்த மார்ச் 15-ந் தேதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனுதாரர் தன்னுடைய அணிக்கு தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தாக்கல் செய்த மனுவில் உள்ள கோரிக்கை மட்டும் இங்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 29ஏ அடிப்படையிலும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை இந்த அணி பின்பற்றவில்லை என்ற காரணத்தினாலும் மனுதாரருக்கோ அல்லது அவரது அணியினருக்கோ குக்கர் சின்னம் வழங்குவதற்கான கோரிக்கையை இந்த கோர்ட்டு நிராகரிக்கிறது.

இருப்பினும் தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களவை தேர்தல் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையில் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்யும் வகையில், மனுதாரர் தரப்பு வேட்பாளர்கள் அனைவருக்கும் ‘ஒரே‘ பொதுவான சுயேச்சை சின்னம் ஒன்றை தலைமை தேர்தல் கமிஷன் வழங்குமாறு உத்தரவிடப்படுகிறது.

இந்த அணிக்கு ஒரே பொதுவான சுயேச்சை சின்னத்தை ஒதுக்குமாறு தலைமை தேர்தல் கமிஷனுக்கு பிறப்பிக்கும் இந்த உத்தரவு அந்த அணிக்கு தனிக்கட்சியாக அங்கீகாரம் அளிப்பதாக பொருள் படாது. இந்த அணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைத்து வகையிலும் சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள். இவர்கள் எந்த கட்சியையும் சாராதவர்களாகவே கருதப்படுவார்கள். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story