அயோத்தி விவகாரத்தில் புதிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்


அயோத்தி விவகாரத்தில் புதிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 10:00 PM GMT (Updated: 26 March 2019 8:33 PM GMT)

அயோத்தி விவகாரத்தில் புதிய மனு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் இறுதி தீர்வு எட்டப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்த பிரச்சினையில் கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண ஒரு சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந்தேதி அமைத்து உத்தரவிட்டது. அதில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சமரச குழுவின் கூட்டங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் நகரில் நடைபெறும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

இந்த நிலையில் நிர்மோகி அகாரா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், பிரச்சினையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சமரச குழுவின் கூட்டங்களை டெல்லியிலோ அல்லது நடுநிலையான வேறு இடத்துக்கோ மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அத்துடன் சமரச குழுவில் சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற 2 நீதிபதிகளையும் இடம்பெறச்செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.


Next Story