போட்டியிட வாய்ப்பு மாறுப்பு: 300 இருக்கைகளை கட்சி அலுவலகத்தில் இருந்து எடுத்துச்சென்ற காங்கிரஸ் பிரமுகர்


போட்டியிட வாய்ப்பு மாறுப்பு:  300 இருக்கைகளை கட்சி அலுவலகத்தில் இருந்து எடுத்துச்சென்ற காங்கிரஸ் பிரமுகர்
x
தினத்தந்தி 27 March 2019 3:45 AM GMT (Updated: 27 March 2019 3:47 AM GMT)

மராட்டிய மாநிலம் சில்லோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ அப்துல் சட்டார் கட்சி அலுவலகத்தில் இருந்த இருக்கைகளை எடுத்துச்சென்றார்.

அவுரங்கபாத்,

மராட்டிய மாநிலம் சில்லோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ அப்துல் சட்டார். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாய்ப்பு கோரி கட்சி தலைமையிடம் அப்துல் சட்டார் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது. இதனால், ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சாகுன்ச் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்த 300 இருக்கைகளை அப்துல் சட்டார் எடுத்துச்சென்றது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், உள்ளூர் கட்சி அலுவலகத்துக்கு வந்த எம்.எல்.ஏ சட்டார் தனது ஆதரவாளர்களுடன் 300 இருக்கைகளை எடுத்துச்சென்றார். இருக்கைகள் அனைத்தும் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்ததாக கூறிவிட்டு சட்டார் எடுத்துச்செல்வதை பார்த்த, அலுவலகத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

 அவுரங்கபாத் மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கோரி சட்டார் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தாராம். ஆனால், சட்டாருக்கு வாய்ப்பு வழங்க மறுத்த காங்கிரஸ் தலைமை சுபாஷ் சம்பாட் என்ற எம்.எல்.சிக்கு வாய்ப்பு வழங்கியது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த சட்டார் தான் கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் கூறி வருகிறாராம்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த எம்.எல்.ஏ சட்டார், இருக்கைகள் எனது சொந்த செலவில் வாங்கி கொடுத்ததால் அனைத்தையும் எடுத்துச்சென்றுள்ளேன். நான் கட்சியில் இருந்து விலகி விட்டதால், அவ்வாறு செய்தேன். யாருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் இருக்கை வாங்கி கொடுக்கவும்” என்றார். 

ஆனால், அவுரங்கபாத் தொகுதியில் போட்டியிட உள்ள சம்பாட், சட்டார் கூறியதை மறுத்தார். சட்டார் கட்சியில் இருந்து விலகவில்லை எனவும், வேறு நிகழ்ச்சிக்கு தேவைப்பட்டதால், சட்டார் ஆதரவாளர்கள் இருக்கைகளை எடுத்துச்சென்றனர். நாங்கள் யாரும் அதிருப்தியில் இல்லை” என்றார். 


Next Story