கோவா துணை முதல்-மந்திரி நீக்கம்: மாநில அரசியலில் பரபரப்பு


கோவா துணை முதல்-மந்திரி நீக்கம்: மாநில அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 March 2019 9:00 PM GMT (Updated: 27 March 2019 8:35 PM GMT)

கோவாவில் துணை முதல்-மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டது மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பனாஜி,

கோவா மாநிலத்தில் பா.ஜ.க தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பா.ஜ.க., தலா 3 எம்.எல்.ஏக்கள் கொண்ட மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி, 3 சுயேச்சைகள் ஆகியோரின் ஆதரவில் ஆட்சி நடத்தி வந்தது.

இதற்கிடையில் மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பின், யார் முதல்-மந்திரி என்று கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது.

கோமந்தக் கட்சியும், கோவா பார்வர்டு கட்சியும் முதல்-மந்திரி பதவியை கோரின. எனினும் பா.ஜ.க.வை சேர்ந்த பிரமோத் சாவந்த் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இதையடுத்து நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், இரு கட்சியின் தலைவர்களுக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கி பா.ஜ.க. சமாதானம் செய்தது.

கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் தவாலிகர், கோவா பார்வர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர். அதன்பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் பெரும்பான்மையை நிரூபித்தார்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களான, மனோகர் அஜ்கோன்கர், தீபக் பவாஸ்கர் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு தங்களின் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். அதற்கான கடிதத்தை சபாநாயகர் மைக்கேல் லோபோவைச் சந்தித்து அவர்கள் அளித்தனர்.

சபாநாயகர் அதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் 36 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 12-ல் இருந்து 14 ஆக உயர்ந்துள்ளது. சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், தற்போது பா.ஜ.க.வுக்கும் 14 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், இனிமேல் தனிப்பெரும் கட்சி என்று கூறிக்கொண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கக்கோரி கவர்னரிடம் மனு அளிக்க முடியாது.

இந்த நிலையில் துணை முதல்-மந்திரியான கோமந்தக் கட்சியைச் சேர்ந்த சுதின் தவாலிகர் மட்டும் பா.ஜ.க.வில் தங்களுடைய கட்சியை இணைக்க சம்மதம் தெரிவித்து கடிதம் அளிக்கவில்லை.

இதையடுத்து, சுதின் தவாலிகரின் துணை முதல்-மந்திரி பதவியை பறித்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் நேற்று உத்தரவிட்டார்.

துணை முதல்-மந்திரி பதவிக்கு வேறொருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என அவர் தெரிவித்தார். அந்த பதவி, புதிதாக இணைந்த இரு எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.


Next Story