விண்வெளியில் 300 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தி இந்தியா சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்


விண்வெளியில் 300 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தி இந்தியா சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 28 March 2019 12:15 AM GMT (Updated: 27 March 2019 11:05 PM GMT)

விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார். இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நேற்று காலை, பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மத்திய மந்திரிசபை குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மூத்த மத்திய மந்திரிகள், முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, காலை 11.45 மணியளவில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற போவதாக தகவல் வெளியானது. பிரதமர் மோடியும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை பதிவு செய்தார். முக்கியமான செய்தியுடன் உரையாற்ற போவதாகவும், டெலிவிஷன், வானொலி, சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் இந்த உரையை பாருங்கள் என்றும் அவர் கூறி இருந்தார்.

இதனால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்துக்கு முதல்கட்ட தேர்தல் நடப்பதற்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில், அவர் ஏதேனும் சலுகை அறிவிப்புகளை வெளியிடப்போகிறாரோ என்று கருதப்பட்டது.

பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை குழு கூட்டத்துக்கு பிறகு உரையாற்றுவதால், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கருதப்பட்டது.

அதே சமயத்தில், பகல் 12 மணியை தாண்டியும் பிரதமர் மோடி உரையை தொடங்கவில்லை. இதனால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், பகல் 12.23 மணிக்கு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அப்போது, விண்வெளி துறையில் இந்தியா படைத்த புதிய சாதனையை அவர் அறிவித்தார். அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு நாட்டின் பயணத்திலும், மிகுந்த பெருமையை அளிக்கக்கூடிய, இனிவரும் சந்ததிகளுக்கும் வரலாற்று சிறப்புமிக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தருணங்கள் இருக்கும். அத்தகைய தருணம் இன்று வந்துள்ளது.

விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் (ஏவுகணை மூலம்) சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது. வெறும் 3 நிமிடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த திட்டத்துக்கு ‘மிஷன் சக்தி’ என்று பெயர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) இத்திட்டத்தை வகுத்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வெற்றிக்காக ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. ‘மிஷன் சக்தி’ திட்டம் மிகவும் சிக்கலானது. அதீத வேகத்தில், மிகுந்த துல்லியத்துடன் நடத்தப்பட்டது. இதன் வெற்றி, இந்திய விஞ்ஞானிகளின் அளப்பரிய திறமையையும், நமது விண்வெளி திட்டத்தின் வெற்றியையும் காட்டுகிறது.

தாழ்வான புவி சுற்றுவட்டப்பாதையில் பறந்து கொண்டிருக்கும் ஒரு செயற்கைகோளை சுட்டு வீழ்த்துவது நமது நாட்டின் அரிய சாதனை ஆகும். அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு 4-வது நாடாக இந்த சாதனையை இந்தியா செய்துள்ளது. இதன்மூலம், இந்தியா விண்வெளி வல்லரசாக உயர்ந்து நிற்கிறது. இதனால், இந்தியா மேலும் வலிமையாகவும், பாதுகாப்பாகவும் திகழும்.

இந்த சோதனை, எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. எந்த சர்வதேச சட்டங்களையோ, உடன்படிக்கைகளையோ நாம் மீறவில்லை. 300 கி.மீ. உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைகோளை முன்கூட்டியே இலக் காக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பின்னர், தனது ‘டுவிட்டர்’ பக்கத்திலும் இதே தகவல்களை அவர் பதிவு செய்தார்.

தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பின்னர், ‘மிஷன் சக்தி’ திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகள் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பதாக கூறி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, அவர்களுடைய இந்த சாதனை குறித்து தேசம் பெருமை கொள்வதாகவும் கூறினார்.

மேலும், உலகமே ஒரு குடும்பம் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுவதாக கூறிய மோடி, உலக அளவிலும், பிராந்திய அளவிலும் அமைதி மற்றும் நல்லெண்ணத்துக்காக இந்தியா பாடுபட்டு வருவதாகவும் இதற்காக இந்தியா வலிமையாக இருக்கவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி, இதற்கு முன்பு, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நாட்டு மக்களுக்கு டெலிவிஷன் மூலம் உரையாற்றினார். அப்போது, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அதன் பிறகு, இப்போதுதான் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி உள்ளார்.

மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ‘மிஷன் சக்தி’ திட்டம் குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘விண்வெளியில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம் அருகே உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து 3 நிலைகளை கொண்ட ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அது விண்வெளியில் உள்ள குறிப்பிட்ட இலக்கை (செயற்கைகோள்) திட்டமிட்டபடி துல்லியமாக தாக்கி அழித்ததாகவும், இது முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்றும் அவர் கூறினார்.


Next Story