அசாமில் வாகன சோதனையில் மிரட்டி பணம் பறிப்பு; தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த 2 பேர் கைது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அசாமில் வாகன சோதனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கவுகாத்தி,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தினை பறிமுதல் செய்ய தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அசாமில் புகார் ஒன்றின் பேரில் திபங்கர் ஹசரிகா மற்றும் அலி கமல் உசைன் என்ற தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, இந்திய தேர்தல் ஆணையம் நியமித்த இவர்கள் இருவரும், போலீசில் புகார் அளித்தவரிடம் நடத்திய சோதனையில் ரூ.2.5 லட்சம் கண்டுபிடித்து உள்ளனர்.
அவர், வாகனம் வாங்க தன்னுடன் ரூ.2 லட்சம் கொண்டு வந்தேன் என்றும், தனது சகோதரரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கடனாக பெற்றுள்ளேன் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை நம்ப அதிகாரிகள் மறுத்ததுடன் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தினை மிரட்டி பறித்து கொண்டனர். மீதமுள்ள பணத்துடன் அவரை அனுப்பி விட்டனர் என தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அந்த நபரும், அவரது சகோதரரும் போலீசில் புகார் அளித்தனர். இதன்மீது நடந்த விசாரணையில் அதிகாரிகள் இருவரும் ரூ.25 ஆயிரம் பணத்தினை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர் என தெரிய வந்துள்ளது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் 2 அதிகாரிகளையும் கைது செய்தனர். பின் அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story